அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
By Aruvi | Galatta | Jan 09, 2021, 11:39 am
மகாராஷ்டிராவில் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை ஒன்று பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என ஏராளமான பல பரிவுகள் இருக்கின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில், அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
தீ பற்றி எரிந்த வேகத்தில், மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் தீ முற்றிலுமாக பரவி உள்ளது. இதனால், பதறி அடித்துக்கொண்டு அங்கிருந்தவர்கள் தங்களது குழந்தைகளைக் காப்பாற்ற இங்கும் அங்கும் ஓடி உள்ளனர்.
அத்துடன், இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
மேலும், இந்த தீ விபத்தில் தற்போது வரை 17 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்போது, “அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருந்து பல குழந்தைகளை மீட்டு உள்ளோம். அவர்களுக்கு தற்போது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் உள்ள குழந்தைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இது, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து” என்றும், அவர் கூறினார்.
இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், பண்டாரா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில், அதுவும் பச்சிளம் குழந்தைகள் இருக்கும் பரிவில் எப்படி தீ
விபத்து ஏற்பட்டது? இந்த தீவிபத்திற்கு என்ன காரணம்? என்று, வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
அதே போல், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரியானது சுமார் 250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அங்குள்ள சத்தாராவில் உள்ள கோண்டுஷியில் இருந்து ராய்காட்டிற்கு இந்த மினி லாரி வந்து கொண்டு இருந்துள்ளது. இந்த லாரியில் மணமக்கள் உள்ளிட்ட சுமார் 70 பேர் பயணித்துள்ளனர்.
இதில் லாரி நேற்று மாலையில், ராய்காட் மாவட்டம் போலாட்பூர் அருகில் உள்ள குட்பான் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுமார் 250 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல், திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அருகே அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், அரசு பேருந்து டயரில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக சுருதி என்ற குழந்தையும் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். தற்போது, இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.