“நீ கருப்பு பிகரு” என்று, தோழிகள் கேலி கிண்டல் செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி கருப்பு நிறம் பிரச்சனையானது, இன்று வரை எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவைப் போன்ற உலக வல்லரசு நாடுகளிலேயே தற்போது வரை, அந்த பிரச்சனை இருக்கும் போது, இந்தியாவில் இதே பிரச்சனை இருப்பதில் வியப்பு இல்லை என்ற போதிலும், படித்தவர்கள் அதிகமான மாநிலமாக இருக்கம் கேரளாவில், அதுவும் படித்துக்கொண்டு இருக்கும் மாணவிகள் மத்தியில், கருப்பு நிறப் பிரச்சனை எழுந்திருப்பது தான் வேதனையான விசயமாக இருக்கிறது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் - சிந்து தம்பதியரின் வசித்து வருகின்றனர்.

சதீஷ்குமார் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவர் மனைவி சிந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 19 வயதான ஆர்த்தி என்ற மகள் உள்ள நிலையில், அவர் அங்குள்ள நெடுமங்காடு அரசு கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இளம் பெண் ஆர்த்தியின் தோழிகள் சிலர், அவரை “நீ கருப்பாய் இருக்கிறாய்” என்று, கருப்பு நிறத்தை வைத்தே கேலி செய்து வந்துள்ளனர். ஆனால், இந்த வலி மனசுக்குள் இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அந்த இளம் பெண் இருந்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அனைவரும் அவரவர் வீடுகளில் தங்கி உள்ளனர். இதனால், பொழுது போகாத தோழிகள் சிலர், ஆர்த்திக்கு போன் செய்து, அவரின் நிறத்தை வைத்தே அவரை கிண்டல் செய்து வந்துள்ளனர்.

அத்துடன், கருப்பு நிறத்தை வைத்து பாட்டு பாடியும், அவரது தோழிகள் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கேலி கிண்டல் சமீபகாலமாகத் தொடர்ந்து அதிகரித்ததால், ஆர்த்தி கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். 

மன உளைச்சலின் உச்சமாக, அவர் தற்கொலை செய்துகொள்ளவும் முடிவு செய்தாக தெரிகிறது. அந்த நேரம் பார்த்து, ஆர்த்தியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய ஆர்த்தியின் சகோதரி அவானி, தனது சகோதரி தூக்கில் தொங்கியதைப் பார்த்து சத்தம் போட்டுக் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரின் உடலைக் கீழே இறக்கி உள்ளனர்.

மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், ஆர்த்தியின் அறையில், ஆர்த்தி தற்கொலை செய்துகொள்ளும் முன், அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், “நான் கருப்பாக இருப்பதால், என் தோழிகள் என்னைத் தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அதனால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதி இருந்தது. இதனைப் பார்த்த ஆர்த்தியின் பெற்றோர் மீண்டும் கதரி அழுதுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆர்த்தியின் தற்கொலைக்குக் காரணமான, அவரது தோழிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.