கர்மயோகி என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
By Madhalai Aron | Galatta | Sep 03, 2020, 06:32 pm
மத்திய அரசு ஊழியர்களுக்குப் பணியில் சேர்ந்த பிறகு வழங்கப்பட இருக்கும் பயிற்சித் திட்டமான கர்மயோகி என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று (செப்டம்பர் 2) ஒப்புதல் அளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பயிற்சி, அரசாங்கத்தின் மனிதவள மேலாண்மை நடைமுறைகளைத் தீவிரமாக மேம்படுத்தும் என்றும், அரசு ஊழியர்களின் திறனை அதிகரிக்க இது அதிநவீன உள்கட்டமைப்பைப் பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் இந்தத் திட்டத்தை அறிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கர்மயோகி திட்டத்தின் கீழ் தங்கள் செயல்திறனை மேம்படுத்த வாய்ப்பு கிடைக்கும். கர்மயோகி திட்டம் இந்திய அரசு ஊழியர்களை எதிர்காலத்தில் இன்னும் ஆக்கபூர்வமான, கற்பனை வளத்தோடு, புதுமையான, செயல்திறன்மிக்க, தொழில்முறையிலான, முற்போக்கான, ஆற்றல்மிக்க, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாற்றும்” என்று கூறியுள்ளார்.
இதுபற்றி மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளைக் கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கர்மயோகி திட்டம், பிரதமரின் பொது மனிதவள மேம்பாட்டுக் குழு, திறன் வளர்த்தல் ஆணையம், டிஜிட்டல் சொத்துகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான தொழில்நுட்ப தளத்தை நிர்வகிக்க சிறப்பு நோக்கு அமைப்பு, அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 46 லட்சம் மத்திய ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்க்க 2020-21 முதல் 2024-25 வரை 5 ஆண்டுகளில் ரூ 510.86 கோடி செலவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதை வரவேற்றுள்ள மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், பொது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
உலகத்தின் மிகப்பெரிய அரசு சேவைகள் சீர்திருத்த திட்டம் என்று கர்மயோகி இயக்கத்தை வர்ணித்த அவர், தனிப்பட்ட, துறை சார்ந்த மற்றும் செயல்முறை அளவிலான திறன்மிகு பொது சேவை வழங்கலை கட்டமைப்பதற்கான விரிவான சீர்திருத்தம் இது என்றார்.
"அமைச்சரவையால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ள தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கம், புதிய இந்தியாவின் எதிர்காலத்துக்குத் தயார் நிலையில் இருக்கும் அரசு சேவைகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றும்," என ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.