ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி 7 வது இடத்தில் களமிறங்கியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கான காரணம் என்னவென்று தோனி விளக்கம் அளித்துள்ளார்.
சார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற 4 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியின் பந்து வீச்சை பொலந்து கட்டியது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் சேர்த்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது.
இதில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த லீக்கில் 2 வது போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாகும்.
சென்னை அணி தோல்வி அடைந்த போதிலும், கேப்டன் தோனி 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். குறிப்பாக, டாக் கரன் வீசிய இறுதி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதில், ஒரு சிக்சர் ஸ்டேடியத்தையும் தாண்டி, அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் அந்த பந்து விழுந்தது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில் கேப்டன் தோனி இந்த போட்டியில் 7 வது இடத்தில் தான் களம் கண்டார். ஆனாலும், 7 வது இடத்தில் இறங்கிய போதும், தோனி ரன்களை அடிக்காமல் மற்றொரு வீரரான டூ பிளஸிஸை அடித்து ஆடச் சொல்லி, அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் சிங்கிள் ரன்கள் மட்டுமே அடித்து தோனி விளையாடினார். முக்கியமாக, கடைசி ஓவரில் தான் அவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன் காரணமாகவே, சென்னை அணி நேற்றைய போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இது கிரிக்கெட் உலகில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கவுதம் கம்பீர் கூறியுள்ள விமர்சனத்தில், “சென்னையின் அணியின் கேப்டன் தோனி, 7 ஆம் நிலையில் இறங்கியதும், அறிமுக வீரர் ருதுராஜ் கெய்க்வாடையும், சாம் கரணையும் தோனி, தனக்கு முன்னால் களமிறங்கச் செய்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இது, அர்த்தமே இல்லாத ஒரு விசயம். தோனி போன்ற ஒரு ஹிட்டர் இறங்காமல் பின்னால் தள்ளிப்போட்டது தான் கேப்டனாக அணியை வழி நடத்துவதா?” என்று, கவுதம் கம்பீர் தோனியை விமர்சித்து உள்ளார்.
“உடனே, கடைசி ஓவரில் தோனி 3 சிக்சர்கள் அடித்தார் என்று கூறுவார்கள். அதனால் என்ன?, அது அவரது சொந்த ரன்களே. அணியின் வெற்றிக்கான ரன்கள் அது இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்தை 4 ஆம் நிலை அல்லது 5 ஆம் நிலையில் இறங்கி தோனி ஆடியிருந்தால், டூ பிளஸிஸ் உடன் சேர்ந்து ஒரு சிறப்பான ஆட்டத்தைத் தந்திருக்க முடியும். அது, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கும்” என்றும், கம்பீர் கூறியுள்ளார்.
குறிப்பாக, “நேற்றைய போட்டியில் சென்னை சி.எஸ்.கே. அணியிடம் தீவிரமே இல்லை, நோக்கமே இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் இருந்து இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதே நேரத்தில் இது தொடர்பான விமர்சனங்களுக்கு கேப்டன் தோனி “நான் ஏன் 7 வது இடத்தில் களம் இறங்கினேன்” என்று விளக்கம் அளித்து உள்ளார்.
அதில், “ நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் எனக்கு உதவியாக இல்லை. சாமுவுக்கு வாய்ப்புகளை வழங்க நான் வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்க விரும்பினோம். அது எடுபட வில்லை என்றால், நீங்கள் எப்போதும் போல உங்கள் தனித் திறமையோ விளையாடலாம் என்று டூ பிளஸியிடம் கூறினேன்.
அதே நேரத்தில், 217 ரன்களை விரட்டிப் பிடிப்பதற்கு எங்களுக்கு ஒரு நல்ல ஆரம்பம் தேவையாக இருந்தது. ஆனால், அது அமைய வில்லை. அதே போல், அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதில் தவறு செய்தனர். இதையும் தாண்டி, நாங்கள் எதிர் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அதையும் தவற விட்டதால், தோல்வியைச் சந்திக்க வேண்டியதாயிற்று” என்று தோனி விளக்கம் அளித்தார்.
ஆனாலும், தோனியின் இந்த விளக்கத்தைத் தாண்டி, மிகப் பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.