இந்தோனேசியாவில் குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத் தான், “நான் கர்ப்பமாக இருந்ததாக உணர்ந்தேன்” என்று குழந்தை பெற்றெடுத்த பெண் ஒருவர் கூறிய சம்பவம் வைரலாகி வருகிறது.
இயற்கையாகவே பெண்களுக்கு 10 மாதம் பேறு காலம் முடிந்த பிறகு குழந்தை பிறப்பது தான் வழக்கம். அது தான் காலம் காலமாக இயற்கையாக நடந்துகொண்டிருக்கும் முறையாகும். ஆனால், இந்தோனேசியாவில் குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத் தான், “நான் கர்ப்பமாக இருந்ததாக உணர்ந்தேன்” என்று குழந்தை பெற்றெடுத்த பெண் ஒருவர் கூறிய சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியா நாட்டில் உள்ள மேற்கு ஜாவாவில் அமைந்துள்ள தாசிக்மலயா பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஹெனி நூரேனி என்ற பெண்ணிற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன.
இதனிடையே, 28 வயதான ஹெனி நூரேனி, எப்போதும் போல் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும், தன்னுடைய அன்றாட பணிகளைக் கவனித்துக்கொண்டும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஹெனி நூரேனியின் வயிற்றின் வலது பக்கத்தில் திடீரென்று ஏதோ அசைவதை அவர் உணர்ந்துள்ளார். இதனால், பயந்துபோன அந்த பெண், தன் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த அவரது பெற்றோர், அந்த பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்குச் சென்றதும், அந்த பெண்ணிற்கு லேசாக வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், பயந்துபோன அந்த பெண்ணின் பெற்றோர், மருத்துவர்களை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அதன்படி, மருத்துவர்களும் அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் கருவுற்று இருப்பதாகவும், உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
அதன்படி, அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், “ நான் கர்ப்பமான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்து உள்ளேன்” என்று கூறினார்.
“நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அதன் பிறகு, திடீரென்று, என் வயிற்றின் ஏதோ அசைவதை உணர்ந்தேன். இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வயிற்றில் எனக்குப் பிடிப்புகள் இருந்தது. அதன் பிறகு தான், மருத்துவர்கள் வந்த நிலையில், அந்த ஒரு மணி நேரத்திற்குள் நான் குழந்தை பெற்றெடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “கடந்த 9 மாதங்களாக எனக்குத் தவறாமல் மாதம் தோறும் மாதவிலக்கு ஏற்பட்டது என்றும், குழந்தை பெற்றெடுப்பதற்குச் சற்று முன்பு கூட இரத்த போக்கு எனக்கு இருந்தது” என்றும், அந்த பெண் கூறி உள்ளார்.
இந்த செய்தி, இந்தோனேசியா முழுவதும் பரவி நிலையில், மருத்துவ உலகம் இதனை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியது.
இது தொடர்பாக இந்தோனேசியாவில் உள்ள பண்டுங் ஹசன் சாதிகின் மருத்துவமனை மகப்பேறு நிபுணர் டாக்டர் ருஷ்வானா அன்வர் கூறும் போது, “கர்ப்பமாக இருக்கும் 25 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “பெண்கள் சில நேரங்களில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்க மாட்டார்கள் என்றும், ஒரு வேளை, அவர் எடையைக் குறைத்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவர் குழந்தையுடன் இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம்” என்றும், மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
எனினும், “ஒரு பெண் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லாத ஒரு விசயம்” என்றும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், “இது ஒரு ரகசிய கர்ப்ப காலமாக இருக்கலாம் என்றும், ரகசிய கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம்” என்றும், மற்ற மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இவ்வளவு ஆச்சரியத்திற்கும் நடுவிலும் தாய் - மகன் ஆகிய இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.