பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் உலக அரசியல் தலைவர்களின் பட்டியல்.. பிரதமர் மோடியின் பெயர் சேர்ந்தது!
பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் உலக அரசியல் தலைவர்களின் பட்டியலில் தற்போது பிரதமர் மோடியின் பெயரும் சேர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிலர் கொல்லப்படுவதுமாக அவ்வப்போது தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் லங்கேஷ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் கௌரி லங்கேஷ், அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, “பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து” பெங்களூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார். அப்போது பேசிய அவர், “கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும், இது போன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி, என்னை விட சிறந்த நடிகர்” என்றும் மிக கடுமையாக விமர்சித்தார். இது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அரசியல் தலைவர்களின் பட்டியலை ஆர்.எஸ்.எப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு தற்போது வெளியிட்டு உள்ளது.
இந்த 2021 ஆம் ஆண்டுக்கான இந்த புதிய பட்டியலில் 37 உலக தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
அதில், “ஊடக செய்திகளுக்குத் தணிக்கை முறையை ஏற்படுத்துவது; பத்திரியாளர்கள்களை சிறையில் தள்ளுவது; அவர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவீழ்த்து விடுவது; நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்தியாளர்களின் மரணத்திற்குக் காரணமாக அமைவது" போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த புதிய பட்டியலில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே இடம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
அதே போல், “வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாமு ஆகிய 2 பெண் தலைவர்கள் உட்பட 17 பேர் புதிதாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
“17 பேர் கொண்ட புதிய பட்டியலில், பிரதமர் மோடியும் ஒருவராக இதில், சேர்ந்து உள்ளார்.
அதாவது, “இந்தியாவில், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற நாள் முதல், இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து வருவதாக” ஆர்.எஸ்.எப். அமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளது.
அத்துடன், “கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, அந்த மாநிலத்தைச் செய்தி மற்றும் தகவல்களைக் கட்டுப்படுத்தும் ஆய்வுக் கூடமாகப் பயன்படுத்தினார்” என்றும், அந்த அமைப்பு பகிரங்கமாக விமர்சித்து உள்ளது.
“ஆனால், மோடி பிரதமரான பிறகு முன்னணி ஊடகங்களில் சாமானிய மக்களுக்கான ஆதரவு நிலைப்பாடு போன்ற தேசிய கொள்கை பேச்சுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அதிகப்படியாகப் பரவ விடுதல் போன்றவற்றை அவர் கொள்கையாகவே கொண்டு இருந்ததாகவும்” அந்த அமைப்பு பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது.
குறிப்பாக, “ஊடகத்தை நடத்தும் முதலாளிகளுடன் மோடி நட்பு பாராட்டியதால், அந்த ஊடகத்தில் பணிபுரிவோர் பிரதமர் மோடியை விமர்சிக்க அஞ்சியதாகவும்” அந்த அமைப்பு, சுட்டிக்காட்டி உள்ளது.
அதே போல், “பிரதமர் மோடிக்கு எதிராகச் செய்தி வெளியிடுவோரை மிரட்டும் செயலில் அவரது ஆதரவு செயல்பட்டதாக” கூறும் ஆர்.எஸ்.எப். அமைப்பு, “கர்நாடக பெண் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதையும்” அதில் அடிக்கோடிட்டுக் காட்டி உள்ளது.
முக்கியமாக, “பத்திரிகை சுதந்திரம் உள்ள 180 நாடுகளின் பட்டியலில், இந்தியாவுக்கு இந்த ஆண்டு 142 ஆம் இடமே கிடைத்துள்ளது” என்றும், ஆர்.எஸ்.எப். அமைப்பு பட்டியலை வரிசைப்படுத்தி உள்ளது.
இதனிடையே, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் உலக அரசியல் தலைவர்களின் பட்டியலில் தற்போது பிரதமர் மோடியின் பெயரும் சேர்ந்துள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.