இந்தியாவில் தினந்தோறும் 381 தற்கொலைகள்! குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
By Aruvi | Galatta | Sep 02, 2020, 11:53 am
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாள்தோறும் 381 பேர் தற்கொலை செய்துகொண்டதாக, குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது.
தற்கொலைகள் என்பது, ஏதோ ஒரு காரணங்களுக்காக ஒரே ஒரு நொடியில் தோன்றிவிடும் தரமற்ற முடிவாகவே அமைந்து விடுகிறது. தற்கொலைகள் செய்து கொண்டால், எல்லா பிரச்சனைகளும் இத்தோடு முடிந்து விடுவதாக நினைத்துக்கொள்ளும் அறியாமையால், புரியாமையால், தெரியாமையால் எல்லாவற்றுக்கும் மேலாக ஒட்டுமொத்த மடமையால் எடுக்கப்படும் ஒரு அற்ப முடிவு.
இப்படி தற்கொலை என்னும் ஒரு அற்பத்தனமான முடிவைத் தான், இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 381 பேர் தற்கொலைகள் செய்துகொண்டுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது அதிர்ச்சி அளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், “இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக” தெரிவித்துள்ளது.
குறிப்பாக, “நாள்தோறும் சராசரியாக 381 பேர், தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பதிவாகி இருப்பதாகவும்” தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது.
“இந்த புள்ள விபர எண்ணிக்கையானது அதற்கு முந்தைய ஆண்டான கடந்த 2018 ஆண்டில், 1,34, 516 என்ற எண்ணிக்கையில் இருந்துள்ளன. அதேபோல், அதற்கு முந்தைய ஆண்டான 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 1,29,887 ஆக இருந்துள்ளன. இதில், 2017 ஆம் ஆண்டின் தற்கொலை எண்ணிக்கையை, 2018
ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 3.4 சதவீதம் அளவு அதிகரித்துள்ளதாகவும்” என்.சி.ஆர்.பி. என்னும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சுட்டிக்காட்டி உள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பி. என்னும் தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது, கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தற்கொலை மரணங்கள் தொடர்பான புள்ளி விபரத்தையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, “இந்தியாவின் நகர் பகுதிகளில் தற்கொலை விகிதம் 13.9 சதவீதமாகவும், கிராம ஊரக பகுதிகளில் இது 10.4 சதவீதமாக உள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளது. இதனால், கிராம ஊரக பகுதிகளை காட்டிலும், நகர் பகுதிகளில் தான் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெற்று உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இதிலும், “தூக்கு மாட்டிக் கொள்ளும் முறையில் 53.6 சதவீதம் பேரும், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டவர்களில் 25.8 சதவீதம் பேரும், நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டவர்களில் 5.2 சதவீதம் பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக” தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது.
மேலும், “55 சதவீதம் பேர் குடும்ப பிரச்சனை, திருமணம் தொடர்பான பிரச்சனை மற்றும் நாட்பட்ட நோய் பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக “தற்கொலை செய்துகொண்டவர்களில் 70.2 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 29.8 பேர் மட்டுமே பெண்கள் என்றும்” அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தற்கொலை செய்துகொண்டவர்களில் 68.4 சதவீதம் பேர் திருமணமானவர்கள் என்றும், மற்றவர்கள் திருமணம் ஆகாதவர்கள்” என்றும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.
“இந்தியாவில் அதிக தற்கொலை அரங்கேறிய மாநிலங்களில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா மாநிலமும், 2 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளதாகவும்” தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது.
இதில், அதிக பட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 18,916 என்ற அளவில் தற்கொலைகள் பதிவாகி உள்ளன. 2 ஆம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 13, 493 பேரும், 3 ஆம் இடத்தில் உள்ள மேற்கு வங்கத்தில் 12,665 பேரும், 4 ஆம் இடத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் 12,457 பேரும், 5 ஆம் இடத்தில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் 11,288 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த குறிப்பிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 49.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு உள்ளதாகவும், அதிக அளவிலான மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் வெறும் 3.9 சதவீதம் மட்டுமே தற்கொலைகள் பதிவாகி உள்ளதாகவும்” தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சுட்டிக்காட்டி உள்ளது.
அதேபோல், கடந்த 2019 ஆம் ஆண்டி சாலை விபத்து உயிரிழப்புகளில் சென்னை நகருக்கு முதலிடம் பெற்றுள்ளது. 2 வது இடத்தில் டெல்லி நகரும், 3 வது இடத்தில் கொல்கத்தாவும், 4 வது இடத்தில் மும்பை நகரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.