9,10,11 ஆம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை!

9,10,11 ஆம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை! - Daily news

தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதனால், பொது மக்களுடன், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் அதிக அளவில் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

அதன் படி, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்குக் கடந்த 8 ஆம் தேதி ஒரு மாணவிக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அந்த பள்ளியில் படிக்கும் ஒட்டு மொத்தமாக 1,078 மாணவிகளுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில், 58 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் கொரோனா நோய் தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது.

அத்துடன், அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 மாணவிகளின் பெற்றோர்களுக்கும் கொரோனா பரவி இருப்பது தெரிய வந்தது. இதனால், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இப்படியான நிலையில் தான், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், கும்பகோணத்தில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியை மற்றும் 6 மாணவிகளுக்கும், ஒரத்தநாட்டில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கும் கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதே போல், தஞ்சை அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

இப்படியாகத் தஞ்சை மாவட்டத்தில் இது வரை தஞ்சை, அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆசிரியர்கள், 88 மாணவ - மாணவிகள் என்று, மொத்தமாக 142 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழக கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தனர்.

முக்கியமாக, சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை பிறகு, “தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை” என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே நேரத்தில், “9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறும்” என்றும், தமிழக அரசு சற்று முன்பு அறிவித்துள்ளது. 

Leave a Comment