ஹரியானா முதலமைச்சர் பங்கேற்க இருந்த விழா மேடையை விவசாயிகள் சூறையாடியதால், முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஹெலிகாப்டரிலேயே  திருப்பிச் சென்றார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 47 வது நாளாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகளுடன் மத்திய அரசு இது வரை 8 கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தியும், இதுவரை எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை. அந்த 3 புதிய சட்டங்களும் முழுவதுமாக திரும்பப் பெற வில்லை. இதனால், அந்த 3 புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஹரியானாவில் வேளாண் சட்டங்களின் நன்மையை விளக்கி கூறும் வகையில், அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கிசான் மகா பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இதற்னெ்று, அங்குள்ள கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்தில் ஒரு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, அந்த அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கலந்துகொள்ளும் விழா மேடையை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிரடியாகப் புகுந்து சூறையாடினர். 

முக்கியமாக, அந்த விழா மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகள், மேஜைகளை உடைத்து எறிந்த விவசாயிகள், தொடர்ச்சியாக வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். 

குறிப்பாக, முதலமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். விவசாயிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, முதலமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர், போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால், முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஹெலிகாப்டரிலேயே திருப்பிச் சென்றார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், “நான் வந்து பேசுவதற்காக சுமார் 5 ஆயிரம் பேர் காத்திருந்தனர். ஆனால், அது நடைபெறவில்லை. ஆர்ப்பாட்டங்களைக் கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கு நிலைமையை மோசமாக்க நான் விரும்பாததால், அங்கிருந்து திரும்பி வர முடிவு செய்தேன்” என்று, குறிப்பிட்டுள்ளார். 

இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளிடமும் சக உள்ளூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையில் அதன் கூட்டணி கட்சியான ஜனநாயக் ஜன்தா கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வால், பாஜகவிற்கு இனி சறுக்கல் தானா? என்றும், பலரும் விமசர்னம் செய்து வருகின்றனர். இணையத்தில் இது தொடர்பான கருத்து யுத்தமும் நடைபெற்று வருகிறது.