பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!
By Nivetha | Galatta | Oct 06, 2020, 03:02 pm
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்துக்கு அனுமதி, இ பாஸ் முறை ரத்து என முக்கிய அறிவிப்புகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியான நிலையில் அடுத்தகட்ட தளர்வுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும் நிறைய தகவல்கள் வெளிவருகின்றன.
ஆறு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து பாடங்களை படித்துச் செல்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 22 ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ``தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை” என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் பேசிய அவர், ``அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மற்றும் ஊர்ப்புற நூலகங்களில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்பப்படும். இதுவரை 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்” என்றும் கூறினார்.
தமிழகத்தில் பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாவிட்டாலும், இந்தியாவில் பல இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே தொடங்கப்பட்டதால், பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகைப்பதிவேட்டில் நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், நேடிரயாக பள்ளி வர முடியாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான புதிய வழிகாட்டுதலை மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது.அதில், பள்ளிகளை அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். இது கட்டாயமல்ல. வீட்டிலிருந்தபடி பள்ளி மாணவா்கள் கற்றலைத் தொடா்வதற்கான இணையவழி வகுப்புகளை தொடா்ந்து நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.மேலும், பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றவேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளையும் இந்த வழிகாட்டுதலில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவா்கள் பெற்றோரின் எழுத்துப்பூா்வமான சம்மதத்துடன் வரவேண்டும். அவசர உதவிக் குழு, மாணவா் பொது உதவிக் குழு, தூய்மை ஆய்வுக் குழு உள்ளிட்ட குழுக்களை பள்ளிகள் அமைக்க வேண்டும்.மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் சொந்த வழிகாட்டி நடைமுறைகளை வகுத்துக்கொள்ளலாம்.வகுப்புகளிலும், பள்ளிக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்படிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.வகுப்பு நேரத்தில் மாணவா்கள் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பயிற்சிபெற்ற முழுநேர மருத்துவ உதவியாளா், செவிலியா் அல்லது மருத்துவா் பள்ளியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.வருகைப் பதிவு மற்றும் விடுமுறை அளிக்கும் நடைமுறைகளில் தளா்வுகளை கடைப்பிடிக்க வேண்டும்.பள்ளிகள் திறந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தோ்வுகள் எதுவம் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த வழிகாட்டுதளில் இடம்பெற்றுள்ளன.