இந்தமுறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ,பி.எல் போட்டிகள் நடைபெறுமா, நடைபெறதா என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே நிலவி வந்தது. வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் மாதங்களும் கடந்து சென்றதால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் தலைவர் பிரிஜேஷ் படேல் 2020-ம் ஆண்டுக்கான போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``நாங்கள் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டோம். இதையடுத்து, செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். போட்டிகள் குறித்து அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இந்தப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் போட்டிகளை அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் 13-வது ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதிகாரபூர்வ போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸூம் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இந்திய வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா என ஏறக்குறைய 15 வீரர்கள் சில தினங்களில் சென்னைக்கு வருகை தர உள்ளனர்.
ஐ.பி.எல். மட்டுமன்றி, வேறு கிரிக்கெட் போட்டிகளும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அப்படி ஒன்றாக, இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் போட்டி சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், அதில் இங்கிலாந்து அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா, லோவர் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி, ரன்கள் குவித்தார். அவரின் விக்கெட்டை எடுத்த பின்னர் ஸ்டுவர்ட் பிராட், ஒழுங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு போட்டியின் ரெஃப்ரியாக இருந்த கிறிஸ் பிராட், ஸ்டுவர் பிராடுக்கு 15 சதவீத ஆட்டத்தின் செலவை அபராதமாக விதித்தார். குற்றத்தை ஒப்புக் கொண்ட ஸ்டுவர்ட் பிராட், அபராதத்தைக் கட்ட சம்மதித்தார்.
கிறிஸ் பிராட், இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆவார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ரெஃப்ரியாக செயல்பட்டு வருகிறார். தன் மகன் பங்கு பெறும் போட்டிகளில் கிறிஸ், ரெஃப்ரியாக பங்கேற்க கூடாது என்கிற விதிமுறை உள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் காலக்கட்டம் என்பதனால், இங்கிலாந்தில் உள்ள அவரே ரெஃப்ரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாளை இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி சவுதாம்டனில், பயோ-பாதுகாப்பு முறையில் தொடங்குகிறது.