``இந்துத்துவா, மருத்துவர்களிடையே, முரண்பாட்டை ஏற்படுத்துகிறது" - மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்!
By Nivetha | Galatta | Dec 01, 2020, 12:59 pm
``இந்தியாவில், இந்துத்துவ அடையாள அரசியல் காரணமாக, அரசு மருத்துவத்தை காவி மயமாக்குகிறது. அது " ஆயுஷ்' மற்றும் நவீன அறிவியல் மருத்துவர்களிடையே, முரண்பாட்டை மோதலை அதிகப்படுத்துகிறது. இது நாட்டுக்கும், மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கும் நல்லதல்ல" என்று, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவிந்திரநாத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மருத்துவம் தொடர்பாக, ஆயுஷ் மருத்துவம் குறித்தும் தனது கருத்தை தெரிவித்திருக்கும் மருத்துவர் ஜி.ஆர். ரவிந்திரநாத்,
``எப்போதுமே, 'மருத்துவ அறிவியல்' என்பது, ஒன்றே ஒன்றாகத் தான் இருக்க முடியும். அது "நவீன அறிவியல் மருத்துவம்" மட்டும் தான். ஆனால் மருத்துவ அறிவியலில் பல்வேறு வகை அறிவியல்கள் இருப்பது போன்ற ஒரு தவறான கருத்தியல் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.நிலை நாட்டப்படுகிறது. அந்த வாதத்திற்கு ``இயக்கவியல் பொருள்முதல்வாதம்" என்ற உயரிய அறிவியல் தத்துவஞானத்தை ,அறிவியல் ஆராய்ச்சி முறையை அறிந்த அறிஞர்கள் கூட இரையாகி விடுகின்றனர். தேசிய இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையிலான அடையாள அரசியல்களே இதற்குக் காரணம்.
மருத்துவ அறிவியலின் தோற்றம்,வளர்ச்சி, அதன் எதிர்காலம் குறித்த "இயங்கியல் பொருள் முதல்வாதப்" பார்வை, அணுகுமுறை இல்லாதது இந்த தவறான புரிதலுக்கு காரணமாக அமைகிறது. பண்டைய மனிதர்கள், உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த அனுபவங்களிலிருந்து சரியானவற்றை, தேவையானவற்றை, ஏற்று வளப்படு்த்தி, வளர்த்தெடுத்து முன்னேற்றியது தான், இன்றைய நவீன அறிவியல் மருத்துவமும், அறுவை சிகிச்சை முறைகளும். திடீரென்று அவை வானத்திலிருந்து குதித்தவையல்ல.
அறிவியல் தொழில் நுட்பம் ரெடிமேடு சரக்கல்ல. யாரோ சில நபர்களின் மூளையில் திடீரென ஊற்றெடுத்து வழிந்தோடியதல்ல. அது மனித குலத்தின் அனுபவம். இயற்கையின் மீது மனித குலம் செயலாற்றி வருவதன் மூலம், நடைமுறையின் மூலம் உருவாகி வளர்ந்த ஒன்று. இன்றைய பல்துறை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகள், எந்திர நுண்ணறிவு, மனித எந்திரங்கள், நவீன கருவிகள் மருந்துகள் போன்றவை அறுவை சிகிச்சை முறைகளை மிக உயர்ந்த பட்ச நிலைக்கு உயர்த்தியுள்ளன. மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த உயர்ந்த நிலையை , இதற்கு முன்பு மனித குலம் எட்டியிருக்க முடியாது. ஏனெனில் அதற்கான நிலைமைகள், அறிவியல் வளர்ச்சி ,கருவிகள் அப்போது இல்லை. இன்றைய அறுவை சிகிச்சை முறைகளை வேண்டாம் என புறக்கணித்துவிட்டு, யாரும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய அறுவை சிகிச்சை முறைகளை விரும்ப மாட்டார்கள்.
அக்கால அறுவை சிகிச்சை முறைகளின் வலியையும், கொடுமையான முறைகளையும், பாதிப்புகளையும் யாரும் பொறுத்துக் கொள்ள முடியாது.அவற்றை நினைத்தாலே மனதில் பயம்,பதற்றம் உருவாகுகிறது.
அன்றைய வளர்ச்சி நிலை அவ்வளவுதான். அக்கால மருத்துவர்களை குறை சொல்ல முடியாது.
அன்றைய ,அந்த அறுவை சிகிச்சை முறைதான் சிறந்தது என இப்போது யாரும் கொண்டாட முடியாது.
இன்னிலையில், எதற்காக ஆயுர்வேத அறுவை சிகிச்சை முறை என்ற ஒரு படிப்பை உருவாக்க வேண்டும்? அதில் ஏராளமானோரை படிக்க வைக்க வேண்டும்? பின்னர் , அதன் போதாமையால் , ஏன் நவீன அறிவியல் அறுவை சிகிச்சையில் அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்? "ஆயுஷ்" டாக்டர்களை மட்டுமல்ல ,எந்த மனிதரையும் அறுவை சிகிச்சைக்கு பயிற்று விக்க முடியும். மனிதர்களால் முடியும்.
அதுவல்ல பிரச்சனை..
பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன என்ற பம்மாத்து செய்து கொண்டே, இந்த வழக்கொழிந்த ,
காலாவதியான, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் , நிலை மறுக்கப்பட்ட ( negated) முறைமையை இன்னும் ஏன் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்?
பழமைவாதமும், அடையாள அரசியலுமே இதற்குக் காரணம்.
மருத்துவ அறிவியலில் உரம் போட்டு வளர்க்கப் பட்டிருக்கும் அடையாள அரசியல்,மனித உழைப்பு சக்தியை விரயமாக்குகிறது.
மூடநம்பிக்கைகளை புகுத்துகிறது. தவறான நம்பிக்கைகளை ஊக்கப் படுத்துகிறது. மருத்துவத்தில் கருத்து முதல்வாதத்தை திணிக்கிறது. இயங்காவியல் (Metaphysical) அணுகுமுறையை அறிவியல் என நிரூபிக்க முயல்கிறது. மருத்துவ அறிவியலின் வளர்ச்சிக்கு கேடு பயக்கிறது. நோயாளிகளை குழப்புகிறது. அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
மதம் ,இனம் ,தேசம் போன்ற அடையாள அரசியல் மருத்துவ அறிவியலை சீர்குலைக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மறுப்புக்கு உள்ளான (Negated), தங்கள் மருத்துவ முறைதான் சிறந்தது என வறட்டுத்தனமாக, சண்டையிடும் ஆயுஷ் நண்பர்கள் தொடர்ந்து அம் முறைகளை கடைபிடிப்பது தானே சரியாக இருக்கும்!
அவற்றை அம்போ என விட்டு விட்டு ,நவீன அறிவியல் மருத்துவ சிகிச்சைக்கு மாறினால் , அந்த "ஆயுஷ் " மருத்துவ முறைகள் படிப்படியாக செத்து விடாதா?
அவற்றை யார் தான் காப்பது? கட்டி அழுவது?
இந்துத்துவ அடையாள அரசியல் மருத்துவத்தை காவி மயமாக்குகிறது. அது " ஆயுஷ்' மற்றும் நவீன அறிவியல் மருத்துவர்களிடையே, முரண்பாட்டை மோதலை அதிகப்படுத்துகிறது. இது நாட்டுக்கும், மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கும் நல்லதல்ல"
என்று கூறியிருக்கிறார்.