“மக்கள் மரணிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா?” டெல்லி நீதிமன்றம் காட்டம்..
By Aruvi | Galatta | Apr 30, 2021, 05:49 pm
“மக்கள் மரணிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா?” என்று, டெல்லி நீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.
இந்தியாவில் 2 வது அலையாக வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ், தலைநகர் டெல்லியில் மையம் கொண்டு, எல்லா திசைகளிலும் மிக கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் உதவியை நாடினார். எனினும், கொரோனாவின் பாதிப்பு சீராகவில்லை.
இந்த நிலையில், “டெல்லியில் உள்ள தடுப்பூசி மையங்களில் நாளை வரிசையில் நிற்க வேண்டாம் என்றும், தடுப்பூசி கையிருப்பில் இல்லை” என்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார்.
அதாவது, “மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், டெல்லியில் தற்போது நிலவும் சூழ்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே போதுமான தடுப்பூசிகள் இல்லை என்ற கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூறும்போது, “யாரும் நாளை தடுப்பூசி மையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்” என்று, கேட்டுக்கொண்டார்.
“முறையான தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை என்றம், தடுப்பூசி வந்தவுடன், நாங்கள் முறையான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றும், அதன் பிறகு தடுப்பூசிக்காகப் பதிவு செய்த நபர்கள், தடுப்பூசி மையங்களுக்கு வரலாம்” என்றும், அவர் கூறியுள்ளார். இதனால், மத்திய அரசுக்கு எதிராக பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டிசிவிர் மருந்து வழங்கப்படும் என்ற நடைமுறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, “மக்கள் மரணிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.
ரெம்டிசிவிர் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ரெம்டிசிவிர் மருந்துக்கு கட்டுப்பாடுகள் நிலவுவதால், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோருக்கு மட்டுமே ரெம்டிசிவிர் மருந்து வழங்க வேண்டும் என்று, சிகிச்சை நடைமுறை மாற்றப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தது.
இது தொடர்பான வாதங்களும் அரசு தரப்பில் இன்று முன்வைக்கப்பட்டன. இதனைக் கேட்ட நீதிபதி பிரதீபா சிங், நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் வழங்கப்படுவதற்கான நடைமுறையை மாற்றியதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “இந்த நடவடிக்கையால் பொது மக்கள் மரணிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா?” என்று, வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “ஆக்சிஜன் உதவியின்றி சிகிச்சை பெறுவோருக்கு மருத்துவர்கள் அந்த மருந்தைப் பரிந்துரைக்க முடியாதபடி செய்வது முற்றிலும் தவறான நடவடிக்கை” என்றும் நீதிமன்றம் கண்டித்து உள்ளது.
“மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், அதனை சரி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமே தவிர, பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது” என்றும், நீதிபதி மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனிடையே, “மக்கள் மரணிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா?” என்று, டெல்லி நீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டமாகக் கேள்வி எழுப்பியது, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.