கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு.. கோவிஷீல்டு தடுப்பூசி விலை இருமடங்கு உயர்வு!
By Aruvi | Galatta | Apr 21, 2021, 02:29 pm
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இரு மடங்காக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் தடுப்பூசியின் தேவை முன்பை விட தற்போது மேலும் அதிகரித்து உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் தொடர்ந்து நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதாவது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு பரிசோதனையினை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து மேற்கொண்டு வந்தன.
இதில், சீரம் நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவை இணைந்து பல்வேறுகட்ட பரிசோதனைகளை நடத்தின. இதில் ஆராய்ச்சியில் நல்ல பலன்கள் கிடைத்தன. இதையடுத்து, கோவிஷீல்ட் சீரம் நிறுவனத்தின் புனே ஆய்வகத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்பார்வையின் கீழ் கொருானா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியே தற்போது நாடு முழுவதும் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அத்துடன், முன்களப்பணியாளர்கள், வயது முதிர்ந்தோர், உடல் நலக் குறைபாடு உடையோர், 45 வயதிற்கு மேற்பட்டோர் என பல்வேறு தரப்பினரும் இந்த தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலை அளவில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது.
இந்த நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தற்போது இரு மடங்காக உயர்த்தி உள்ளது.
அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளில் 600 ரூபாய்க்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று, அந்த நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளது.
இந்த விலை ஏற்றமானது, மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், “மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தனித்தனியே விலையை நிர்ணயித்துள்ள சீரம் நிறுவனம், இந்த விலை ஏற்றமானது அமெரிக்கா, ரஷியா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும் போது, மிக குறைவு தான் என்றும், விளக்கம் அளித்து உள்ளது.
அதே போல், “தங்களது மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதம் மத்திய அரசு செயல்படுத்தும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும், 50 சதவிகித தடுப்பூசி உற்பத்தி மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்” என்றும், சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கும் கொரோனா தடுப்பூசி டோஸ் விலையை உயர்த்தியுள்ள போதும், மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை முந்தைய விலையான 250 ரூபாய்க்கே தொடர்ந்து வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, இனி இரு மடங்கு கட்டண உயர்வு வாங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பொது மக்கள் ஏற்கனவே போதுமான வருவாய் இல்லாமல் இருக்கும் நிலையில், இது போன்ற அடிப்படையான மருந்துகளின் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.