“இந்தியாவில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3 வது அலையை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும், வரும் அக்டோபர் மாதத்தில் அது உச்சத்தில் இருக்கும்” என்றும், ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவுக்கு உலகின் பல நாடுகளும் தொடர்ந்து மருந்து கண்டுபிடித்து வரும் நிலையில், கொரோனாவும் தனது பங்கிற்கு புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து, புதிய புதிய வைரஸ் நோயாக உருவெடுத்து வருவது தான், ஒட்டுமொத்த உலக மக்களையும் மீண்டும் பீதியடையச் செய்துள்ளது.

இப்படியான சூழ்நிலையி்ல், தமிழகத்தில் கொரோனா நிலவரத்தைப் பார்க்கும் போது, “தினசரி கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் 100 க்கும் கீழ் குறைந்து, 17 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என்கிற நிலை கடந்த வாரம் வரை உருவாகி இருந்த நிலையல், தற்போது கடந்த 4 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது, தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், ஐதராபாத் ஐஐடி யின் மதுகுமளி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐஐடி யின் மனிந்திரா அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கணித முறை அடிப்படையில் கொரோனா 3 வது அலையை கணித்து உள்ளனர். 

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர், “கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது, 3 வது அலை இந்த ஆகஸ்ட்டு மாதத்திலேயே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக” தெரிவித்து உள்ளனர்.

    “இந்தியாவில் கொரோனா 3 வது அலை ஏற்பட்டால், அக்டோபரில் அது உச்சத்தை அடையும் என்றும், ஆனால் கொரோனா 2 வது அலையைப் போல 3 வது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு இருக்காது” என்றும், குறிப்பிட்டுள்ளார். 

    “கொரோனா 2 வது அலையில் நாள்தோறும் அதிக பட்சமாக 4 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டனர் என்றும், ஆனால் 3 வது அலையில் ஒரு லட்சம் முதல்  அதிகபட்சமாக 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    “அதே போல், கொரோனா 2 வது அலை குறித்து, ஐஐடி ஆய்வாளர்கள் இருவரும் கணித ரீதியிலான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டனர் என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டது போலவே, கொரோனா 2 வது அலையின் பாதிப்பும்  இருந்தது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    ஆனால், இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையி்ல், தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. 

    அதன் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 40 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி” செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,16,95,958 ஆக உயர்ந்துள்ளது.

    அதே போல், தமிழகத்தில் 4 வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

    அதன் படி, தமிழகத்தில், கொரோனா பாதித்து 20,524 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 175 பேருக்கும், கோவையில் 230 பேருக்கும், செங்கல்பட்டில் 133 பேருக்கும், ஈரோட்டில் 180 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    இதனிடையே, ஓராண்டிற்குப் பிறகு சத்தீஷ்கார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.