“வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு” தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் கடந்த 8 மாதங்களையும் தாண்டி, 250 நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதிகள் மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 10 க்கும் மேற்பட்ட முறை பேச்சு வார்த்தை நடத்தியும், இது வரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

ஆனால், “3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும்” என்பதில், விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து
வருகிறது.

இந்த நிலையில் தான், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, மத்திய அரசின்
 கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்த நிலையில், இதற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர். 

அதனால், போராட்டக் களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சற்று முன்பாக டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “போராடி வரும் விவசாயிகளின் குரலை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்து உள்ளேன் என்றும், மத்திய அரசு விவசாயிகளின் குரல்களை ஒடுக்குகிறது” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

அத்துடன், “நாடாளுமன்றத்தில் இது பற்றி விவாதம் நடத்தவும் அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் இந்தக் கருப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” என்றும், ராகுல் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

மேலும், “இந்த சட்டங்கள் 2, 3 தொழிலதிபர்களுக்கு சாதகமானது என்பது இந்த நாட்டுக்கே தெரியும் என்றும், மத்திய அரசின் கூற்றுப்படி, விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும், ஆனால் உண்மையில் விவசாயிகளின் உரிமைகள் தற்போது பறிக்கப்படுகின்றன” என்றும், ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.