`கொரோனா பரவல் நேரத்தில், இந்தியாவில் ஜெ.இ.இ. - நீட் தேர்வு நடத்துவது நியாயமற்றது!' - சிறுமி கிரேட்டா
By Nivetha | Galatta | Aug 25, 2020, 04:54 pm
16 வயதே ஆன ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தனி ஆளாக நின்று குரல் கொடுத்தார். ஐ.நா-வில் உரை, நோபல் பரிசுக்குப் பரிந்துரை போன்றவற்றை வெறும் சில மாதங்களிலேயே தன்வசப்படுத்தியுள்ளார் சிறுமி கிரேட்டா.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஸ்வீடனில் சிறிய பதாகையுடன் தன் போராட்டத்தை முன்னெடுக்கும்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளியைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தி பொதுமக்களின் கவனம் ஈர்த்தார். கிரேட்டாவின் கோரிக்கையை ஏற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக, மக்கள் அவர் பின்னால் வரத்தொடங்கினர்.
`Friday For Future’ என்ற அமைப்பைத் தொடங்கிப் பல நாடுகளுக்குச் சென்று காலநிலை மாற்றம் குறித்துப் பேசிவருகிறார். ‘உலக வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம் போன்றவை வெறும் சாதாரண விஷமல்ல இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதே கிரேட்டாவின் கோரிக்கையாக இருந்தது.
சிறு வயதிலேயே இயற்கைக்காகப் போராடும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே நாட்டைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். இவர்கள் தொடங்கிய நோபல் பரிசுக்கான குரல் உலகம் முழுவதும் வலுக்கத் தொடங்கியது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் கிரேட்டாவும் ஒருவர்.
‘உலகின் பருவநிலையில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதற்குச் சென்ற தலைமுறையினரே காரணம். நீங்கள் செய்தவற்றை நாங்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து 'நார்மல் குழந்தைகளாக இருங்கள்' என்று சொல்லாதீர்கள்’ என கிரேட்டா பேசிய வார்த்தைகள் கவனம் ஈர்த்தவை.
இந்நிலையில் கொரோனா பரவல் மத்தியில் இந்திய மாணவர்களை தேர்வெழுத கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்முடியாத சூழல் உள்ளது. இதனைத் தொடர்ந்து தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.
ஆனால் இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சூழலியல் செயற்பாட்டாளரான ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரேட்டா, ``கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் இந்தியாவில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை மாணவர்களை எழுதச் சொல்வது நியாயமற்றது. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் கோரிக்கைக்கு நான் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற உள்ள தேர்வை ஒத்தி வைக்கக்கோரும் கிரேட்டாவின் கருத்து இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.