“அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று, அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபட கூறி வரும் நிலையில். “பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்” என்று, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ மறுபடியும் கூறியுள்ளது அக்கட்சிக்குள் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பி உள்ளதோடு, சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில். தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் பரபரப்படைந்து உள்ளது.
முக்கியமாக, தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் “அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக யார்?” என்ற பிரச்சனைக்கான கேள்வியை, அக்கட்சியின் முக்கிய மற்றும் மூத்த அமைச்சர்களே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான விவாதங்களும் கடந்த சில மாதங்களாகவே அக்கட்சிக்குள் சூடுபிடித்தது. அதன் தொடர்ச்சியாகவே, அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டன.
இந்த விவகாரம், அக்கட்சியின் சாமானிய தொண்டர் வரை கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சலசலப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து இந்த பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கும் விதமாக, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள். இதனால், அதிமுகவில் உச்ச கட்ட எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
அப்போது, பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சார்பில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார்” என்று, அறிவித்தார். அதே போல், அதிமுக வில் வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழி காட்டுதல் குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால், இந்த பிரச்சனை சுமுகமாக முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து, “அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்” என்று அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான தேர்தல் பரப்புரைகளையும், அக்கட்சியனர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக தமிழ் மாநிலத் தலைவர்கள் சிலர், அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் மேலிடம் தான் முடிவு செய்யும்” என்று, அடுத்தடுத்து அறிவித்து வந்தனர். இதனால், அதிமுக - பாஜகவே இடையே ஒரு குழப்பமான சூழல் நிலவி வந்தது.
ஆனாலும், “அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்” என்று, அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தொடக்கம் முதல் தற்போது வரை கூறிவருகிறார்.
அத்துடன், “பாஜக தலைமை கூறும் கருத்தை மட்டும் தான் ஏற்க முடியும் என்றும், அங்கிருந்து வந்து செல்வர்கள் கருத்தை எல்லாம் ஏற்க முடியாது” எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆனால், “பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்” என்று, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் பேசி உள்ளார்.
இது தொடர்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “பாஜக வை பொறுத்தவை அகில இந்திய கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப் படி அகில இந்திய கட்சியின் தலைவர் தான் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்” என்று, குறிப்பிட்டார்.
“கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால், மாநிலக் கட்சிகளோடு அகில இந்திய கட்சிகள் கூட்டணியில் இருக்கும் போது முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால், அகில இந்திய கட்சி அறிவிக்கும் என்றும்” கூறினார். இது அதிமுகவின் அமைச்சர்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அதிமுக அமைச்சர்கள் இடையே, ஒற்றுமையில்லாத தன்மை நீடிப்பதாகவும், அவர்களில் சிலர் கட்சிக்கு எதிரான மற்றும் முரண்பட்ட தகவல்களை அளித்து வருவதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால், கடந்த சில மாதங்களாக அடங்கியிருந்த அதிமுகவின் உட்கட்சி பூசல் தற்போது மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது.