மும்பையில் விவாகரத்துப் பெற்ற ஒரு தம்பதியினர் தாங்கள் வளர்த்த 2 நாய்களைப் பிரித்து எடுத்துச் செல்ல மனமில்லாமல், வாரம் தோறும் 3 நாட்கள் மாறி மாறி வளர்த்து வரும் சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த வங்கிப் பணியாளரும், அவரது மனைவியும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று, சிகிச்சையும் பெற்று வந்தனர். ஆனால், எந்த பலனும் இல்லை.

இதனையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பகுதியில் உள்ள 2 தெரு நாய்களை அந்த தம்பதியினர் தத்து எடுத்து தங்கள் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர்.

ஆனாலும், தம்பதிகள் இடையே சின்ன சின்ன சண்டை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இதனால், தம்பதிகளுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தம்பதிகள் இருவரும் பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி,  இருவரும் முறையாக நீதிமன்றத்தை நாடிச் சென்ற நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்துப் பெற்றனர்.

இத்தனை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த அவர்கள், ஈகோ பிரச்சனை காரணமாக, முறைப்படி விவகாரத்துப் பெற்றாலும், அவர்கள் குழந்தையைப் பாவித்து வளர்த்து வந்த 2 நாய்களைத் தனித் தனியாகப் பிரிக்க அந்த தம்பதிகளுக்கு மனம் வரவில்லை.

அதற்கு காரணம், நாய்கள் மீது அந்த தம்பதிகள் வைத்த பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த நாய்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று அவ்வளவு பாசம் வைத்திருந்ததும் முக்கிய காரணம்.

இதன் காரணமாக, 2 நாய்களை பிரிக்காமல் மாற்று முறையில் யோசித்த அந்த தம்பதியினர், நீதிமன்றத்தின் அனுமதியுடன், அந்த இரண்டு நாய்களையும் வாரத்தில் 3 நாட்கள் இருவரும் மாறி மாறி வளர்க்கவும், வெளியே அழைத்துச் செல்லவும் அனுமதி வாங்கி, அதன்படி, இருவருமே 2 நாய்களையும் பார்த்துக்கொண்டு வருகின்றனர். 

ஈகோ காரணமாக, தம்பதிகள் பிரிந்தாலும், நாய்கள் மீது வைத்த பாசம், அந்த நாய்களைப் பிரிக்காமல், பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரும் விதாக அடித்தளமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், மும்பையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.