கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலத்தை சைக்கிளிலும், கட்டை வண்டியில் கொண்டுசெல்லும் பரிதாப நிலையானது, டிஜிட்டல் இந்தியாவின் அவலமாக்கப் பார்க்கப்படுகிறது.
ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பாலதுங்குரி கிராமத்தைச் சேர்ந்த அயோதியா ஷாஹூ என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்து உள்ளார்.
இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சடலைத்தை தகனம் செய்ய, அந்த மருத்துவமனையிலேயே பாதிக்கப்பட்டவரின் மகன் தாமோதர் சாஹூ, வாகன வசதியைக் கேட்டிருக்கிறார்.
ஆனால், மருத்துவமனை தரப்பில் எந்த வாகன வசதியும் செய்துகொடுக்கவில்லை. இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டில் தந்தையின் உடலை தகனம் செய்வதற்காக, அவரது மகன் தாமோதர் சாஹூ, தனது சொந்த சைக்கிளில் வைத்து தந்தையின் சடலத்தை சுமந்து சென்று, அங்குள்ள தகன மேடைக்கு எடுத்துச் சென்று, அங்கு வைத்து இறுதிச் சடங்குகளை செய்தார். இப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் சடலத்தை சைக்கிளில் சுமந்த சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் அந்த மாநிலம் முழுவதும் வைரலானது.
ஆனாலும் இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் யாரும் இது வரை எந்த விதி பதிலும் அளிக்கவில்லை. இதனால், மருத்துவமனையின் இந்த செயலுக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர். அத்துடன், இந்த விசயம் அந்த மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், மகன் ஒருவர், தனது தந்தையின் உடலைத் தகனத்திற்காக சைக்கிளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
அதே போல், போபால் மருத்துவமனையில் போதுமான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த பெண்ணின் உடலை கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்ததால், அந்த பெண்ணின் குடும்பத்தினர், ஒரு கட்டை வண்டியில் சடலத்தை எடுத்துச் சென்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோ மாவட்டத்தில் 45 வயதான பெண் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்குள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சரியான மருத்துவ வசதி இல்லாததால், முறையான சிகிச்சை கிடைக்காமலும், அந்த பெண் பரிதாபமாக அந்த மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர், உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்து உள்ளனர். ஆனால், வெகு நேரமாகியும் மருத்துவமனை நிர்வாகம் எந்த ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, அந்த குடும்பம் அந்தப் பெண்ணின் உடலை ஒரு கட்டை வண்டியில் எடுத்துச் சென்றனர். இந்த காட்சிகளை, அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இது வேகமாக வைரலாகி வருகிறது. இதனால், சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.