சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த தோனி, “உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 1929 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், தோனி ஒப்புக்கொள்ளா விட்டாலும் அவருக்கு ஒரு பாராட்டு விழா முறைப்படி நடத்தப்படும் என பிசிசிஐ இன்று கூறியுள்ளது.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார் தோனி. 

இந்நிலையில் பிரியாவிடை ஆட்டம் ஒன்றில் தோனி விளையாடவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி பிசிசிஐ அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

``தோனிக்குப் பிரியாவிடை ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். யாரும் எண்ணாத நேரத்தில் ஓய்வு அறிவிப்பை தோனி வெளியிட்டு விட்டார். இப்போது சர்வதேச ஆட்டம் எதிலும் இந்திய அணி விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியின்போது அவரிடம் இதுபற்றி பேசவேண்டும். நாட்டுக்காக நிறைய பங்களிப்பு அளித்துள்ளார். அதற்குரிய மரியாதை தரப்படும்.

அவர் ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ நிச்சயம் ஒரு பாராட்டு விழா முறைப்படி நடத்தப்படும். அவரை நாங்கள் கெளரவப்படுத்த வேண்டும்" என்றார்.

2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்தும் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. குப்திலின் துல்லியமான த்ரோவில் அவர் ஆட்டமிழந்தார். இதுவே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்துவிட்டது.

எனினும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்பதால் அவரது ரசிகர்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்துள்ளனர். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது சந்தை மதிப்பு சற்றும் குறையவில்லை.

பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ள மகேந்திர சிங் தோனி அதன் மூலம் நல்ல வருவாயும் ஈட்டியுள்ளார். அந்தவகையில் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுவோரில், பிராண்டு மதிப்பு அடிப்படையில் 2018ஆம் ஆண்டில் 12ஆவது இடத்தில் இருந்த தோனி, 2019ஆம் ஆண்டில் 8ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தார். அதே நேரம் பிராண்டு மதிப்பில் சச்சின் டெண்டுல்கர் கூட 15ஆவது இடத்தில்தான் இருக்கிறார். அவரது பிராண்டு மதிப்பு 25 மில்லியன் டாலராக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 238 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.