ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை.. ஆக்சிஜன் தண்ணீர் இன்றி உயிரிழப்பு!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்று ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரிதாபமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஆலக்கனூர் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்ட உள்ளது.
இந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை என்ற காரணத்தால், அதனை மூடாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.
இதனால், அந்த ஆழ்துளை கிணறானது, எந்த பயன்பாடும் இல்லாமல் அப்படியே திறந்த வெளியில் இருந்து உள்ளது.
இந்த சூழலில் தான், இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அதாவது, அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சித்தப்பா என்பவரின் வீடு அமைந்திருக்கிறது.
இந்த சித்தப்பாவிற்கு, இரண்டரை வயதில் சரத் ஹசிரே என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்து உள்ளார்.
அப்போது, சற்று தொலைவில் உள்ள அந்த 15 அடி ஆழ்துளை கிணற்றுக்குள், எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து உள்ளார்.
ஆனால், சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
அதே நேரத்தில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று, அவரது பெற்றோர் ஒரு நாள் முழுவதும் ஊர் முழுக்க தேடி உள்ளனர்.
அத்துடன், எங்குத் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், “குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள்” என்றும், சிறுவனின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடைசியாக மாயமான சிறுவன், வீட்டின் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.
இதனால் பதறிப்போன சிறுவன் பெற்றோர், ஊர் மக்கள் மற்றும் போலீசார், சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதையடுத்து, இது குறித்த விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும், ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரம் ஆகி விட்ட காரணத்தால், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் குழந்தை சோர்வாக இருந்தது தெரிய வந்தது.
அதே நேரத்தில், குழந்தையின் நிலை என்ன என்பது தெரியாமல், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இரவு நேரத்திலும் தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்புப் பணியில் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, குழந்தை மீட்கப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார, “இந்த ஆள்துளை கிணற்றை அமைத்தது யார்? ஏன் மூடாமல் விட்டார்கள்?” என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், “ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை தண்ணீர், உணவு மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.