சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் எனும் இந்தியாவின் முதல் குடிமகன் பதவி வரை தன்னுடைய உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்த ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக, ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார் 7-வது மகனாக பிறந்தவர்தான், ஏவுகனை விஞ்ஞானிதான், நம் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.  

ராமேஸ்வரத்தில் ஓர் எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம் முதலில் தன்னை ஒரு விஞ்ஞானியாகவே முன்னிறுத்திக் கொண்டார். விஞ்ஞானி என்ற அடையாளத்துக்குப் பிறகு, அவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக ஆனார். அதன்பின்னரே, குடியரசுத் தலைவராக உயர்ந்தார். 
இந்தியாவின் தெற்கு எல்லையான ராமேஸ்வரம் தீவில் ஒரு சிறுவனொருவன் கிணற்றுக்குள் கல்லை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். கிணற்றுக்குள் கல் விழுந்ததும், குமிழ்கள் எழுந்துள்ளன. அப்போது அந்த சிறுவனுக்குள் ஒரு கேள்வி! ஏன் குமிழ்கள் எழுகிறது என அந்த சிறுவன் கேள்வி கேட்டுள்ளான். அங்கிருந்து தொடங்கியது அவன் வாழ்க்கை. 

இன்று அவரின் பிறந்த நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது புகைப்படங்களையும், அவர் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். 
 
‘புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டமைத்தவருமான டாக்டர் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியதாக உள்துறை உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவுகூரப்படுகிறார் என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டுள்ளார்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘டாக்டர் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது’ என கூறி உள்ளார்.

மேலும் டாக்டர் அப்துல் கலாம் தொடர்பான வீடியோ தொகுப்பையும் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இப்படியாக அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். அவரது புகைப்படங்களையும், அவர் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.