மோசமாகும் டெல்லி காற்று மாசுபாடு! - அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை
By Nivetha | Galatta | Nov 13, 2020, 05:03 pm
டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.
கடந்த வார நிலவரப்படி, டெல்லியின் ஆனந்த்விஹார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 405 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாகவே இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்களை ‘ஆப்’ செய்யுமாறு மாநில அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும் மாசு குறைந்த பாடில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா அதிகரித்ததற்கு மாசு மிகப்பெரிய காரணம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், ``கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நான் அதைப் பற்றியும் கவலைப்படுகிறேன். அதனைக் கட்டுப்படுத்த அனைத்துவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அடுத்த வாரம் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மேலும் வரும் ஏழு முதல் 10 நாள்களில் பாதிப்புகள் குறையத் தொடங்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நான் நினைக்கிறேன். கொரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்ததற்கு மாசும் ஒரு முக்கிய காரணம். அக்டோபர் 20 வரை நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிடுவதை போலவே, டெல்லியில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது என்பதும், கவனிக்கத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் புதிதாக 7,332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 104 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அம்மாநில அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள அதன் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது தான் என்ற தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் காற்று மாசுவை குறைத்து கட்டுப்படுத்தும் விதமாக வரும் தீபாவளி பண்டிகை உட்பட திருமண நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் பட்டாசு வெடிக்க மற்றும் அதனை சந்தைகளில் விற்பனை செய்ய முழுமையாக தடை விதிக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``கொரோனா அச்சுறுத்தல் மற்றும் காற்று மாசு என இரண்டு சவால்களை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள் பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் உங்கள் சொந்த குடும்பத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்" என்று ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.