“அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார்?!” என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே, நேரடியாகவே அனல் பறக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“அதிமுக வில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்?” என்ற கருத்து யுத்தம், கடந்த மாதமே சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று ஒரு படி மேலே சென்று, செயற்குழு கூட்டத்தில் அனல் பறந்த விவாதமாக மாறிப்போனது.
சென்னையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம், காரசார விவாதங்களுக்கிடையே நிறைவடைந்தது. அதிமுகவின் இந்த செயற்குழு கூட்டம் சுமார் 5 மணி நேரம் நீடித்தது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே காரசார விவாதம் நடந்ததாகத் தகவல்கள் வெளியானது.
முக்கியமாக, “அதிமுக செயற்குழுவில் என்ன நடந்தது?” என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.
அதன்படி,
“முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே நேரடியாக வாக்குவாதம்” நடைபெற்றது.
“என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா” என்று கூறியதன் மூலம் ஓபிஎஸ் தான், இந்த நேரடியான காரசார விவாதத்திற்கு வித்திட்டுள்ளார்.
இதற்குக் காட்டமாகப் பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலா தான்” என்று, நச்சுனு ஒரே வரியில் பதில் அளித்தார்.
மேலும், “கொரோனா காலத்திலும் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய ஓபிஎஸ், “தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே நான் துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன்” என்று, கூறினார்.
“முதல்வராக நான் சிறப்பாக செயல்பட்டுள்ளதைப் பிரதமரே பாராட்டியுள்ளார், சுட்டிக்காட்டி உள்ளார்’ என்று, முதலமைச்சர் பழனிசாமி அதற்குப் பதில் அளிக்கும் விதமாகச் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே, இப்படி நேரடி காரசார விவாதம் நடைபெற்றதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த மூத்த அமைச்சர்கள் பலரும் ஒரு நிமிடம் அப்படியே திகைத்துப் போய் நின்றனர்.
இதனையடுத்து, “முதல்வர் வேட்பாளர் கருத்து மோதலை தள்ளி வைத்துவிட்டு, கட்சியின் நலன் கருதி செயல்படலாம்” என்று, சில அமைச்சர்கள் அப்போது வலியுறுத்தினர்.
மேலும், “11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்க வேண்டும்” என்று, ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிறகே, “முதல்வரை பாராட்டி 5 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது, கட்சி ஒற்றைத்தலைமைக்குக் கீழ் இருக்கிறது என்பதையே காட்டுகிறது” என்று, அந்த கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய .அதிமுகவின் கே.பி.முனுசாமி, “அதிமுக ஒரே பிரிவு தான், இரு பிரிவெல்லாம் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து அறிவிப்பார்கள்” என்றும், கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதனால், “யார் அந்த முதலமைச்சர் வேட்பாளர்?” என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, “டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்கும் எண்ணமே இல்லை” என்று, புகழேந்தி கூறினார். இதனால், அக்கட்சிக்குள் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.