EIA - க்கு எதிராக, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய 500 வல்லுநர்கள்!
By Nivetha | Galatta | Sep 02, 2020, 05:44 pm
வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை எனப்படும் EIA 2020 தொடர்ந்து பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள், சுரங்கம் உள்ளிட்ட விஷயங்கள் அமைப்பதற்காக மக்களிடம் கருத்து கேட்பது கட்டாயம் இல்லை என்கிற மாற்றத்தை கொண்டுவரும் விதி இதில் இருப்பதற்கு இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 500 வல்லுநர்கள் மத்திய அரசுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்றவற்றின் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என 500 பேர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு புதன்கிழமை திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (ஈ.ஐ.ஏ) அறிக்கை 2020 வரைவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில்,
“ஒட்டுமொத்தமாக, வரைவு அறிக்கை நம் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். வரைவு அறிக்கையானது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1983ன் அடிப்படை நோக்கங்களை பின்பற்றுவதில்லை. மேலும் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் நம் நாட்டின் நடவடிக்கைகளுடன் ஒத்துப்போவதில்லை
சுற்றுச்சூழல் வரைவில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டும் அந்தக் கடிதத்தில் எந்தவொரு முன் அனுமதியும் இல்லாமல், தொழில்துறை நடவடிக்கைகளைத் தொடங்க ஊக்குவிக்கும் வரைவு அறிக்கையானது பல சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்த வழிவகை செய்யும்" என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் அந்தக் கடிதத்தில் பொதுமக்களின் கருத்தைப் பெறாமல் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை சுற்றுச்சூழல் பாதிப்பை நோக்கித் தள்ளும் என குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் ஆர்.பி. குப்தா, கடந்த மாதம் வரைவு தொடர்பான அனைத்து கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் மதிப்பீடு செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 3 மொழிகளில் மட்டுமே மோடி அரசு வெளியிட்டிருப்பது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியுள்ளது. சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை அனைத்து மாநில மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக வெளியிடப்படவேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ஆங்கிலம், இந்தி தவிர குறைந்தது 10 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் 30 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், கருத்துக் கேட்பு தேதியையும் ஆகஸ்ட் 11 வரை நீட்டித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை முழுமையாக மத்திய அரசு இன்னும் செயல்படுத்தாமல், மராத்தி, ஒடியா, நேபாளி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே வெளியிட்டிருந்தது.
இப்படி சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு, பல தரப்பிலிருந்தும், பல காரணங்களுக்காகவும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.