2020 - இந்தியாவின் துயர சம்பங்கள்! கருப்பு பக்கங்கள் ஒரு பார்வை! என்னென்ன சம்பவங்கள் நடந்தது தெரியுமா?!
By Aruvi | Galatta | Dec 31, 2020, 09:14 pm
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் துயரமான பல சம்பங்கள் அரங்கேறி இருக்கின்றன. அவை யாவும் இந்தியாவின் கருப்பு பக்கங்களாக மாறி உள்ளன.
அப்படி, என்னென்ன துயர சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்..
2020 ஆம் ஆண்டை யாராலும் அவ்வளவு எளிதாக கடந்து போய் விட முடியாது. நிச்சயம் இந்த 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம் பெறும் ஒரு ஆண்டாகவே பதிவு செய்யப்படும். இந்த வரலாற்று முக்கியதும் வாய்ந்த ஆண்டில், சம காலத்தில் நாமும் அனைத்து தடைகளையும் தகர்த்து எரிந்துவிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறோம் என்பது தான், நமக்கான பெருமையாக அமைந்திருக்கிறது.
கனவுகளை, லட்சியங்களை ஒத்திவைத்துவிட்டு, இந்த ஆண்டில் உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவுக்கு மாறிப்போனது இந்த 2020 ஆம் ஆண்டு. அந்த அளவுக்குப் பல சம்பவங்கள், இந்த அண்டில் நிகழ்ந்திருப்பது தான் ஆச்சரியம்.
அதன் படி, இந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டு முழுவதும் கொரோனாவை சுற்றியே நடந்து முடிந்திருந்தாலும், அதிலும் சில முக்கிய சம்பங்களும் நடந்திருக்கின்றன.
- இந்த 2020 ஆம் ஆண்டின் முதல் பிரச்சனையாக வெடித்து சிதறியது சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம். இது, நாடு முழுவதும் புரட்சி விதைகளைத் தூவிச் சென்றது. டெல்லி மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 6 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர் அல்லாத இதர சமயத்தினருக்குக் குடியுரிமை வழங்குவதை உறுதி செய்கிறது அந்த சட்டம். இருப்பினும், அந்த சட்டத்திற்கு எதிராக, கொரோனா தொற்று தீவிரம் அடையும் வரையில் டெல்லி ஷாஹீன்பாக் மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிட்ட தகுந்த விசயமாகக் கவனிக்கப்படுகிறது. கொரோனா மட்டும் அப்போது பரவில்லை என்றால், இந்த பிரச்சனை பொது மக்கள் மத்தியில் புரட்சித் தீயாக பரவியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- கொரோனாவால் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டதும், அந்தந்த மாநில மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்களோ, அதை விட புலம் பெயர்ந்த பிற மாநில தொழிலாளார்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மார்ச் மாதம் 23ம் தேதி அன்று முதலாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொழிலகங்கள் மூடப்பட்டன. அப்போது, மாநிலம் விட்டு மாநிலம் வந்து கூலி வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து பலரும் வட இந்திய மாநிலங்களுக்குப் புறப்பட்டு சென்றனர். முக்கியமாக, தங்கள் கையிலும், இடுப்பிலும் குழந்தைகளை ஒரு பக்கம் சுமந்தபடி. மற்றொரு கையில் தங்களின் உடமைகளை சுமந்தபடி ஆயிரக்கணகான கிலோ மீட்டர்களை நடந்தே அவர்கள் சென்றனர். இதில், ஒரௌங்காபாத்தை நோக்கி சென்ற 16 தொழிலாளர்கள் களைப்பால் தண்டவாளத்திலேயே தூங்கி உள்ளனர். மறுநாள் மே 8 ஆம் தேதி அதிகாலை, ஔரங்கபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று, அவர்கள் மீது ஏறிச் சென்றதால், அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
- ஜெயராஜ் - பெனிக்ஸ் லாக் டெத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சாத்தன்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட
தந்தை மகனான ஜெயராஜ் - பெனிக்ஸ் இருவரும், அடுத்தடுத்து லாக்கப்பில் இருந்து உயிரிழந்தனர். இது பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும், கடும் வேதனையையும் ஏற்படுத்தியது.
கொரோனா பொது முடக்க நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடையை திறந்த வைத்தது தான், இவர்கள் மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டு. இதற்காக, கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரவு, தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது தான், தந்தை - மகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, ஒரு நாள் இடைவெளியில் மகன் - தந்தை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம், இந்தியா அளவில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, உலகம் முழுவதிலிருந்தும் கடும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்த வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மற்றவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மே மாதம் 7 ஆம் தேதி, இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகபட்டினத்தில் எல்ஜி பாலிமர்ஸ் கெமிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.
- மூணார் நிலச்சரிவு என்பது நினைத்துக்கூடப் பார்த்திடாத ஒரு பெரும் துயர நிகழ்வு. தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நேரத்தில், அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மூணார் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வரிசையாக அமைந்திருந்த 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இரவில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், தூங்கிய நிலையிலேயே சுமார் 70 பேர் உயிரிழந்தனர். சிலர் நீரில் அடித்து செல்லப்பட்டு அருகில் இருக்கும் அணையில் கண்டெடுக்கப்பட்ட துயர சம்பங்களும் கண்ணீர் வரவழைத்தன.
- இந்திய எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40 வீரர்கள் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது. இது, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- கேரளா விமான விபத்த்தை யாராலும் மறந்துவிட முடியாது. கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் இருந்து இந்தியா திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம் திடீரென்று விபத்திற்கு உள்ளாகி 2 ஆக உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் உயிரிழந்த சோகமும் நடந்தது. வழக்கத்திற்கு மாறான வேகத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
- இந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 3 முக்கிய புயல்கள் இந்தியாவை தாக்கி உள்ளன. அதன் படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பன் புயல் மேற்கு வங்கத்தைத் தாக்கியது. பின்னர், புரெவி புயல் தமிழகத்தில் கடலூருக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக, நிவர் புயல் இலங்கையை கடந்து ராமநாதபுரம் அருகே வெகு நேரம் நிலைத்து நின்றது.
இதன் காரணமாக, தென் தமிழகத்தில் வழக்கத்தை விட மிக அதிக அளவிலான கன மழை கொட்டி தீர்த்தது. இதில், நிவர் மற்றும் புரெவி புயல்கள் பெரிய அளவில் பாதிப்பை தரவில்லை. ஆனால், அம்பன் புயலின் தாக்கமானது மேற்கு வங்கம் மட்டும் அல்லாமல், அசாம் வரை எதிரொலித்தது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை உருவாக்கியது. அதீத மழைப் பொழிவின் காரணமாக ஐதராபாத்திலும் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து மிகப் பெரிய சேதாரத்தை உண்டு பண்ணியது.
- ஹத்ராஸ் இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கு, இந்தியாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் மிகப் பெரும் துயர சம்பவமாக அமைந்துபோனது. உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 2 உயர் சாதியை சேர்ந்த இளைஞர்கள் 19 வயது ஆன இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கி கொல்லப்பட்ட நிகழ்வு, பெரும் அதிர்ச்சியையும், நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த பெண்ணின் உடலுக்கு காவல்துறையினர், அந்த பெண்ணின் பெற்றோரின் அனுமதி ஏதும் இன்றி, அதிகாலை 2 மணி அளவில் யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாகத் தகனம் செய்தனர். அந்த பெண்ணிற்கான இறுதி சடங்கிற்குப் பிறகு, கலவரம் எழும் என்று எண்ணிய மாவட்ட நிர்வாகம் மக்களின் நடமாட்டத்திற்கும், ஊடகங்களின் அனுமதிக்கும் தடை விதித்தது. இது தொடர்பாக நியாயம் கேட்டு வந்த காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, போலீசாரால் பிடித்து கீழே தள்ளப்பட்ட நிகழ்வும் அரங்கேறி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- பசி தீர்க்கும் விவசாயிகள் போராட்டம் கடும் குளிரிலும், இன்று வரை 36 வது நாளாக தொடர்ந்து வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, கூட்டம் கூட்டமாக, லாரி லாரியாக, ட்ராக்டர்களில் வந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர். நேற்று 6 ஆம் கட்டமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையிலும், அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசோ 3 புதிய வேளாண் சட்டங்களைத் திருத்தங்களை மட்டுமே முன்மொழிவு செய்து வருகிறது என்றும், அவற்றை திரும்ப பெற வில்லை என்றும், மக்களை விடு பெரும் செல்வந்தர்கள் தான், அரசுக்கு முக்கியமாகப் படுகிறார்கள் என்றும், ஏழை விவசாயிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
- எல்லாவற்றுக்கும் மேலாக, நடந்து முடியப் போகும் இந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயின் ஆதிக்கமாக நிறைந்த ஆண்டாகவே இருந்துள்ளது. இது வரை இந்தியாவில் 1,02,81,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை கொரோனாவால் இந்தியாவில் 1,48,932 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.