2 ஆண்டுகள் 15 லட்சம் சைபர் குற்றங்கள்! இந்தியாவின் அவல நிலை..
By Aruvi | Galatta | Mar 24, 2021, 12:48 pm
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் சைபர் முறைகேடு குற்றங்கள் நடைபெற்று உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் பதிவு செய்துள்ளது.
உலக அரங்கில், இந்தியா வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் அதிக வளர்ச்சியடைந்து வருகிறது. அத்துடன், இந்த புதிய இந்தியாவில் எல்லாம் நவீன மயமாகிப்போன நிலையில், அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறியிருக்கின்றன.
இதனால், எந்த அளவுக்கு இந்தியா நவீன முறைக்குத் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறதோ, அந்த அளவிற்கு நாட்டு மக்களும் இந்த டிஜிட்டல் யுகத்தில் எதிர்மறையாக உள்ள சைபர் முறைகேடு குற்றங்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பாதிப்பானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15 லட்சம் சைபர் முறைகேடு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக மத்திய அரசே, நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புக்கொண்டு உள்ளது.
அதன் படி, கடந்த 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில், 15 லட்சத்திற்கும் மேலான சைபர் முறைகேடு குற்றச் சம்பவங்கள் இந்தியாவில் நடைபெற்று உள்ளதாக மத்திய அரசு பதிவு செய்திருக்கிறது.
இது தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, “தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 பிரிவு 70B இன் படி, சைபர் பாதுகாப்பு முறைகேடு சம்பவங்களை, இந்திய கணினி அவசரக்கால மீட்பு குழு கண்காணித்து வருகிறது” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “இந்த குழு வெளியிட்ட தகவலின் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு, 3 லட்சத்து 94 ஆயிரத்து 499 சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு 11 லட்சத்து 58 ஆயிரத்து 208 சைபர் முறைகேடு சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன” என்றும், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
தொழில் நுட்ப உலகில், இணைய சேவை வசதியானது பெரும் பங்காற்றி வரும் நிலையில், இப்படியான குற்றச் சம்பவங்கள் மிக எளிதாக நடைபெறுகிறது என்றும், கூறப்படுகிறது.
இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில், சிலரின் தவறான செயல்பாடுகளால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பதும் இன்றைய இணைய உலகில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக, கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முன்பைவிட அதிகரித்துக் காணப்பட்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தொடர்ந்து தற்போது, நாட்டு மக்களுக்கு எதிராக சைபர் முறைகேடு சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுவது, பொது மக்களை கடும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.