13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதை 
பதைக்கச் செய்துள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கேரி மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

லக்கீம்பூர் கேரி மாவட்டத்தின் இஷாநகரைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கடந்த 14 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று மாயமானர். மாலை வரை சிறுமி வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதனையடுத்து, மறுநாள் பிற்பகல் நேரத்தில் அந்த பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதாகக் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் சடலத்தைப் பார்த்துள்ளனர்.

அப்போது, சிறுமியின் உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளன. சிறுமியின் முகத்தின் கண் மற்றும் பிற பாகங்களில் அதிக காயங்கள் இருந்தது. அதே போல, சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. 

குறிப்பாக, சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முடிவுக்கு வந்த போலீசார் சிறுமியின் வாய் பகுதியில் ரத்தம் படிந்திருந்ததைக் கவனித்துள்ளனர். அப்போது, சிறுமியின் வாய் பகுதியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, கொடூரத்தின் உச்சமாகச் சிறுமியின் நாக்கு பகுதி அறுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில், சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கொலையில் சம்பந்தப்பட்ட சந்தோஷ் யாதவ், சஞ்சய் கவுதம் ஆகிய இருவரையும்  மாவட்ட  கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் தலைமையிலான போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட இருவர் மீதும்  கொலை மற்றும் கூட்டுப் பலாத்டகாரம் ஆகியவற்றின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டக் கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறும்போது, “ என் மகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறாள். அவள் கண்கள் வெளியேறி, நாக்கு வெட்டப்பட்டு, துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிர் அற்ற நிலையில் கிடந்துள்ளதாக” கதறி அழுதார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள பகுஜன் சமாஜ் வாதி கட்சித் தலைவர் மாயாவதி, “இந்த சம்பவம் மிகவும் வெட்கக் கேடான ஒன்று. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், சமாஜ்வாதி கட்சியின் அரசாங்கத்திற்கும், தற்போதைய பாஜக அரசுக்கும் என்ன வித்தியாசம்?” என்றும், கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக பீம் ராணுவத் தலைவர் சந்திர சேகர் ஆசாத் பேசும் போது, “பாஜக அரசாங்கத்தின் கீழ், பட்டியலின மக்கள் மீதான ஒடுக்கு முறை உச்சத்தில் உள்ளது என்றும், எங்கள் மகள்கள் இங்கே பாதுகாப்பாக இல்லை என்றும், எங்கள் வீடுகள் பாதுகாப்பாக இல்லை, எல்லா இடங்களிலும் அச்சத்தின் சூழ்நிலை தான் உள்ளது” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதனால், பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.