அதிர்ச்சி.. இந்திய பாதுகாப்புத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 1123 வீரர்கள் தற்கொலை!

அதிர்ச்சி.. இந்திய பாதுகாப்புத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 1123 வீரர்கள் தற்கொலை! - Daily news

இந்திய பாதுகாப்புத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 1123 வீரர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனித உயிர்களில் தற்கொலை மிக சாதரான ஒன்றாக ஆகி விட்டது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் தற்கொலைகள் தலையெடுத்து வருகின்றன. பாமர மனிதன் தான், அவனது அன்றாட பிரச்சனைகளால், அதிலிருந்து விடுபட முடியாமல், வாழத் வழி தெரியாமல் குழப்பத்தில் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அநேக இடங்களில் அன்றாடம் நடப்பது உண்டு. இதில், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாவில் அதன் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

பாமர மக்கள் தான், இப்படி வாழத் தெரியாமல் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்கிறார்கள் என்றால், உடலால் பலம் பொருந்திய, பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டு, இந்திய தாய் திருநாட்டின் வீரர்களாக அறியப்படும் போர் வீரர்கள் கூட, தற்கொலை முடிவுகளை எதார்த்தமாக எடுத்து விடுகிறார்கள். 

இப்படியாக, இந்திய பாதுகாப்புத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 1123 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாக, தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதன்படி, இந்திய பாதுகாப்புத்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்து சென்ற 2019 ஆம் ஆண்டு வரை 1,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசே தகவல் தெரிவித்து உள்ளது. 

கடந்த 2010 - 19 ஆம் ஆண்டு வரை விமானப் படையில் 182 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். அதே போல், இந்திய கப்பற்படையில் 40 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு கடந்த 2010 - 19 ஆம் ஆண்டு கால கட்டம் வரை நமது ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் சரியாக 901 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பாதுகாப்புத்துறை எழுத்துப்பூர்வமாகக் கூறியுள்ளது.

அதிலும் குறிப்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் 104 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், 80 பேர் ராணுவ வீரர்கள் என்றும், விமானப்படை வீரர்கள் 16 என்றும், கடற்படை வீரர்கள் 8 பேர் அதில் அடங்குவர் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், கடந்த 2017 ஆம் ஆண்டில் 101 பேரும், 2016 ஆம் ஆண்டு 129 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக, 15 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப்படை வீரர்களைக் கொண்டுள்ள இந்தியாவில், வருடத்துக்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள், இப்படி தற்கொலை செய்துகொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வீரர்கள் பெரும்பாலும், குடும்பத்தினரை விட்டு தனியே இருப்பதால், அவர்கள் மனதளவில் தனிமையை உணர்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், வீரர்கள் அனைவரும் உடல் அளவில் பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும், குடும்ப பிரச்சனைகளை அவர்களை மனதளவில் துவண்டு விடும் வேலைகளைச் செய்து விடுவதாகவும், அதற்குத் தகுந்த ஆறுதல் மற்றும் மனதைத் திடமாக்கும் பயிற்சி கிடைக்காமல் இருப்பதுமே தற்கொலைக்குக் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றுடன், குறைந்த ஊதியம், விடுமுறை இல்லாமல் பணியாற்றுவது, சரியான வசதிகள் இல்லாமல் தினந்தோறும் வாழ்க்கையைச் சமாளிப்பது, ஆறுதல் இல்லாத, தனிமையிலான, கவனிப்பில்லாத என்ற இப்படியாகப் பல பிரச்சனைகள் வீரர்களுக்குள் மன உளைச்சலை உண்டு பண்ணி, இறுதியாகத் தற்கொலை எண்ணங்களைத் தூண்டி விடுவதாகவும் கூறப்படுகிறது. 

எனினும் பணிச்சுமை காரணமாக, வீரர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் விதமாக, மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, கவுன்சிலிங் போன்றவைகளும் அரசு சார்பில் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், வீரர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவு மட்டும் மாறாமல் அப்படியே இருப்பது பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment