அதிக இறப்பில் இந்தியாவுக்கு 4வது இடம், ரஷ்ய துணை பிரதமருக்கு கொரோனா! - இன்றைய அப்டேட்ஸ்
By Nivetha | Galatta | Aug 13, 2020, 06:03 pm
உலகையே மரண படுக்கையாக மாற்றி வருகிறது கொரோனா வைரஸ். ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது கொரோனா. இதுவரை 7.3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவும், அதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் மோசமான பாதிப்பை அடைந்துள்ளது
அதிக உயிரிழப்பை எதிர்கொண்ட நாடுகளில், இந்தியாவுக்கு 4 வது இடம் கிடைத்துள்ளது. 1.99 % என, 2 % க்கும் குறைவாகவே இறப்பு விகிதம் இருந்தாலும், இந்தியா 4 வது அதிக இறப்புக்காக பட்டியலில் இருப்பது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இறப்பு விகிதத்தை பொறுத்தவரை பிரிட்டன் 14.9%, மெக்சிகோ 10.9%, பிரேசில் 3.3%, அமெரிக்கா 3.2% என அதிக சதவீதம் கொண்டுள்ளன. இந்தியா 2% மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 லட்சத்து 68 ஆயிரத்து 218 பேருடன் முதல் இடத்தை அமெரிக்காவும், 1,03,099 பேருடன் பிரேசில் 2-வது இடமும், 53,929 பேருடன் மெக்சிகோ 3-வது இடமும் 47,065 பேருடன் இந்தியா 4-வது இடமும் 46,706 பேருடன் பிரிட்டன் 5-வது இடமும் பிடித்துள்ளது.
உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனாவை குணப்படுத்த 47 வகையான தடுப்பூசிகளை தயாரித்து வருவதாக ரஷ்ய தெரிவித்து வந்தது. இப்படியான சூழலில், இரு தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 11 ம் தேதி, கொரோனாவுக்கு தாங்கள் மருந்து கண்டறிந்து விட்டதாக கூறினார்கள்.
ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டிதான், Sputnik V என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்தது. வெறும் மூன்று மாத சோதனையில் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது, அறிவியலாளர்களிடியே பல கேள்விகளை எழுப்பி வருகின்றது. உலக சுகாதார நிபுணர்களும் இந்த மருந்தை ஏற்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். இன்னும் பல கட்ட ஆய்வும், கடுமையான சோதனைகளும் இந்த மருந்தின் மீது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.
இருப்பினும், ரஷ்ய அதிபர் புதின், இந்த மருந்தை தனது மகள்களில் ஒருவருக்கு செலுத்தியிருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். இந்தக் கருத்தின் மூலம், தங்கள் நாட்டின் தடுப்பு மருந்து, முழுமையாக பரிசோதிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார் புதின்.
இப்படியான சூழலி, இன்றைய தினம் ரஷ்யாவின் துணை பிரதமராக இருக்கும் யூரி ட்ருட்னெவ் என்பவருக்கு, கொரோனா உறுதியாகியுள்ளது. ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த பயணத்திற்கு முன் ட்ருட்னெவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன் முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,02,701 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 15,231 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுவிட்டாலும்கூட, அதுசார்ந்த சர்ச்சைகளிலிருந்து மீளவில்லை ரஷ்யா. இப்படியான சுஉழலில் துணை பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது, மருத்துவ உலகில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.