மோசமான நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை!
By Madhalai Aron | Galatta | Aug 31, 2020, 04:39 pm
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் வயது முதிர்வு காரணமாக சிகிச்சைக்கு அவர் உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. விளைவாக, அடுத்தடுத்த நாள்களில் அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி. ஆனாலும் நிலைமை சீராகவில்லை. சில நாட்களுக்கு பிறகு அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார்.
அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் இதுபற்றி சமீபத்தில் கூறும்போது, அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், அவர் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு கொரோனாவோடு, கூடுதலாக நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், கடந்த சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் #ripPranabMukherjee என பலர் பதிவிட்டு வந்தனர். அதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் பற்றி பல்வேறு செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. ``எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தகவல் தெரிவித்த பின்னரே, சூழல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும் பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழாவன்று, அவரது மகள், ஷர்மிஷ்டா முகர்ஜீ, தனது தந்தை பிரணாப் முகர்ஜீ அவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பழைய படங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர், பிரணாப் முகர்ஜீ அவர்கள் சிறுவயதில் இருந்தே, தனது தந்தை மற்றும் மாமாவுடன் தனது சொந்த கிராமத்தில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில், கொடி ஏற்றுவார்கள் என்றும், அப்போதிலிருந்து அவர் சுதந்திர தினத்தன்று ஒரு வருடம் கூட மூவர்ண கொடியேற்றி கொண்டாட தவறியதில்லை எனவும் அவர் அந்த நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அடுத்த வருடம், தனது தந்தை அதே போன்று சுதந்திர தினத்தில் மூவர்ண கொடி ஏற்றுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் இன்று (ஆக.31) வெளியிபட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக, மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.
செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை விரைவாக செயலிழக்க செய்வதுடன், பிற நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்திருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த கோமா நிலையிலேயே உள்ள பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளது