இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது, தொடக்கக் காலத்தில் மிகவும் மெதுவாகவே அதிகரித்து வந்தது. முதல் நூறு என்ற எண்ணிக்கை வருவதற்கேவும் பல மாதங்கள் ஆகின. ஆனால் இப்போது நிலை அப்படியல்ல. ஆனால் அடுத்த மூன்று மாதங்களில், நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே மூன்றாவது இடத்திற்கு இந்தியா சென்றுவிட்டது. 

ஒரு மில்லியன் நோயாளிகள் என்ற எண்ணிக்கையையும் இந்தியா நேற்று அடைந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 36,139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளுக்குப் பிறகு ஒரு மில்லியன் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா தற்போது மாறியுள்ளது. 

இதற்கு முன்பு 24 மணி நேர இடைவெளியில் பதிவாகாத அளவிலான பாதிப்பு, நேற்று பதிவாகியுள்ளது. அப்படி நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 30,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றியிருப்பது இதுவே முதன்முறை.

அதுபோல், கிருமித்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 606 கூடி, மொத்த உயிரிழப்பு 24,915ஐ எட்டியது.

நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்ததை போல, இந்தியாவில் இறப்பும் அதிகமாகியுள்ளது. அந்தவகையில், இதுவரை 25,000-த்தை நெருங்குகிறது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஆங்காங்கே முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்குப் பீகார் மாநிலத்தில் இம்மாத இறுதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் கர்நாடக மாநிலம் அதிகம் கவனிக்கப்படும் மாநிலமாகி இருக்கிறது. அதே வேளையில், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த மாதத்தில் கிருமித்தொற்றின் தாக்கம் கூடியிருக்கிறது. கர்நாடகாவில் புதிதாகக் கிருமி தொற்றுவோர் விகிதம் நாளுக்கு 7.29 விழுக்காடாக உள்ளது. ஆந்திர மாநிலம் 6.87 விழுக்காட்டுடன் அதற்கடுத்த நிலையில் உள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் மேற்கு வங்கத்திலும்  அந்த விகிதம் முறையே 4.14%, 4.78% என இருக்கிறது.

ஆங்காங்கே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், இந்தியா முழுவதும் ஊரடங்கு தளர்வும் பரலாக இருக்கிறது.

உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, உலகில் கொரோனா பாதிப்பின் ஹாட்ஸ்பாட் ஆக மாறுவதற்கான இடமாக அமையலாமோ என தற்போது அஞ்சுகிறார்கள் அறிவியலாளர்கள்.

ஒரு மில்லியன் நோயாளிகள் என்ற போதிலும், இந்தியாவில் போதிய அளவுக்கு கொரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு வேகமாக அதிகரித்த போது, பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்ததை அடிப்படையாக வைத்து, இங்குப் பரிசோதனைகள் அதிகமானால் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனக் கூறிவந்தனர் அதிகாரிகள். 

மற்றொரு பக்கம், பிற இடங்களை விடவும் இந்தியாவில் மரண விகிதம் குறைவாக இருப்பது விஞ்ஞானிகளைக் குழப்பம் அடையச் செய்துள்ளது. இந்தியாவில் இப்போதைக்கு இறப்பு விகிதம் 3.91 விழுக்காடாக உள்ளது.

இதற்கிடையில் இந்தியாவில் அடுத்தாண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று பாதிப்பு மோசமான சூழ்நிலையில் 6.18 கோடியாகவும், சிறந்த சூழ்நிலையில் 37.4 லட்சமாகவும் இருக்குமென இந்திய அறிவியல் நிறுவனம் கணித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை 275,640 பேருக்கு கொரோனா தொற்று கண்ட நிலையில், அதன் காரணமாக 11,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.

இந்தியாவில் ஆறுதல் தரும் விஷயமாக, இதுவரை 612,815 பேர் கிருமித்தொற்றிலிருந்து மீண்டுவிட்டனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டும் 326,826 சளி/எச்சில் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டதாக அமைச்சகம் கூறியது. இதனுடன் சேர்த்து, இந்தியாவில் இதுவரை 12,739,490 கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதியில் இந்தியாவில் 3.5 மில்லியன் பேரை கொரோனா தொற்றியிருக்கும் என்று பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகம் கணித்து இருக்கிறது.

உலகளவில் இதுவரையில் 13 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 மில்லியன் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகளவில் பலியாகியுள்ளனர். 

 

- ஜெ.நிவேதா