கொரோனா அதிகரிப்பால் டெல்லியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
By Nivetha | Galatta | Nov 17, 2020, 04:29 pm
நவம்பர் மாதத்தில் உலக அளவில் பதிவான ஒரு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில்தான் அதிக அளவில் புதிய நோயாளிகள் பதிவாகி உள்ளது, சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை உலகம் முழுக்க பல பகுதிகளில் ஏற்பட தொடங்கி உள்ளது. குறிப்பாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடடங்கிவிட்டது. அதேபோல் பிரேசில் போன்ற நாடுகளிலும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு தொடங்கிவிட்டது.
இந்தியாவை பொறுத்தவரையில் டெல்லி, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் இரண்டாம் அலைக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. டெல்லியில்தான் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. டெல்லியில் தற்போது தினசரி கொரோனா நோயாளிகள் 7000ஐ தாண்டியுள்ளது. 3000க்கும் கீழ் இருந்த தினசரி நோயாளிகள் தற்போது 7000க்கும் அதிகமாக தினமும் பதிவாகி வருகிறது. உலகில் இருக்கும் பெரு நகரங்களில் டெல்லியில்தான் இந்த நவம்பர் மாதம் முழுக்க அதிக அளவில் தினசரி கொரோனா நோயாளிகள் பதிவாகி உள்ளது.
டெல்லிக்கு அடுத்தபடியாக, நியூயார்க் , பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லா ஆகிய நகரங்கள் உள்ளது. நியூயார்க்கில் 5000-5100 கேஸ்களே வருகிறது . சாவ் பாவ்லாவில் 3000-4000 கேஸ்களே வருகிறது. ஆனால் டெல்லியில் நவம்பர் 11ல் மட்டும் 8593 கேஸ்கள் பதிவாகி உள்ளது.
கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையிலும் டெல்லி மோசமாகவே இருப்பதாக கணிக்கப்படுகிறது. இருப்பினும், டெல்லியில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை உச்சத்தை தொட்டுவிட்டு தற்போது குறையத் தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மேலும் கூறுகையில்,
``டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் கடந்த வாரம் 15.33 சதவீதத்திலிருந்து தற்போது 13 சதவீதமாக குறையத் தொடங்கியுள்ளது. மூன்றாம் அலையானது தற்போது உச்சத்தைத் தொட்டு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைப் பெற 16,500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் 8,000 படுக்கைகள் காலியாக உள்ளன.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகள் டெல்லி முகவரியைப் பயன்படுத்தி கிட்டத்திட்ட 25-30 சதவீதம் பேர் பரிசோதனை செய்து வருகிறார்கள். சோதனை செய்துகொள்ள மறுக்க இயலாததால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது” என தெரிவித்தார்.
இதுகுறித்து, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் கொரோனாவின் 3வது அலை உச்சத்தை தொட்டு தற்போது குறைய தொடங்கியுள்ளதாகவும், தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்துவது பயனற்றது என்றும் கூறியுள்ளார். பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது மட்டுமே தற்போதைய ஒரே தீர்வு என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், இதுவரை விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.45 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது மருத்துவமனைகளுக்கான கூடுதல் படுக்கை வசதிகள் செய்து தர வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் 750 கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தி தரப்படும்" என அமித்ஷா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லியில் இன்று கொரோனா நிலவரம் குறித்துப் பேசிய அரவிந்த் கேஜரிவால், ``டெல்லியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வந்ததால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.