குழந்தைகளுக்கும் இனி மாஸ்க் கட்டாயம்! - உலக சுகாதார நிறுவனம் கருத்து
By Nivetha | Galatta | Aug 23, 2020, 04:25 pm
கொரோனா தொற்று குழந்தைகளையும் விட்டுவைக்காமல் அவர்களையும் மிகவேகமாக தாக்கி வருகின்றது. இருப்பினும் கொரோனா குழந்தைகளை தாக்கினாலும் பெரிய அளவில் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கான காரணமாக அவர்கள் முன்வைப்பது -
குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் வளர்ச்சி நிலையில் இருக்கிறது. அதனால், பெரியவர்களுக்கு உயிர் ஆபத்தை உண்டாக்கும் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ (Cytokine storm) எனும் தடுப்பு மண்டல மிகைச் செயல்பாடு குழந்தைகளுக்கு நிகழ்வது குறைவு; அடுத்ததாக, பெரியவர்களைப் போல் குழந்தைகளுக்கு வேறு துணைநோய்கள் (Comorbidities) காணப்படுவதும் வெகு குறைவு. பலதரப்பட்ட உறுப்புகளைத் தாக்கி அழிக்கும் புரதங்களும் குறைவாகவே சுரக்கின்றன. உயிர்ப் பலியை ஏற்படுத்தும் ‘செப்சிஸ்’ (Sepsis) எனும் நச்சுத்தன்மை அவ்வளவாக உண்டாவதில்லை' என்பதுதான்.
இவையாவும் ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள் மிக வேகமாக கொரோனாவை பரப்பிவிடுவார்கள் என்பதால், அவர்களையும் மிகக்கவனமாக இருக்க சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர் மருத்துவர்கள்.
இதையேத்தான் உலக சுகாதார நிறுவனத்தினரும் கூறிவருகின்றனர். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமுள்ள இடங்களில் வசிக்கும், 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகும் குழந்தைகள், மற்றவர்களிடம் இருந்து 1 மீ., இடைவெளியை பின்பற்றுவதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.
ஒருவேளை அவர்கள் 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால், கொரோனா பரவல் அடர்த்தி, முகக்கவசத்தை பயன்படுத்த கூடிய திறன் மற்றும் போதியளவு பெற்றோர்கள் மேற்பார்வை உள்ளிட்டவற்றை பொறுத்து முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு அதிக ஆபத்து இருப்பதால் மாஸ்க் அணிவதென்பது, மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், 5 வயது மற்றும் அதற்கு கீழுள்ள குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் கருதி முகக்கவசம் அணிய தேவையில்லை. சிறிய குழந்தைகளை விட வயதான குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்புவதில் மிகவும் சுறுசுறுப்பான பங்கை கொண்டிருக்கக்கூடும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவுவதில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் பங்கை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் தரவு தேவைப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் குறைக்க உதவும் வகையில் கடந்த ஜூன் 5ம் தேதி அனைவரும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. ஆனால் அப்போது குழந்தைகளுக்கு என, குறிப்பிட்ட வழிகாட்டுதலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக அறியப்பட்டுவரும் அமெரிக்காவில் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை, 50 லட்சத்துக்கும் அதிகம். அவர்களில், 1.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
இவர்களில், ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் மட்டும், சுமார் 97,000 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, ஆய்வொன்றில் தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் குழந்தைகள் உடல் நலன் தொடர்பான பத்திரிகை நிறுவனமான American Academy of Pediatrics இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில், 3,38,000 க்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் இந்தளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கை உயர ட்ரம்ப்பின் அலட்சியப்போக்கே காரணம் என சொல்லப்படுகிறது.
ஆகவே குழந்தைகள் மீதான அரசாங்கங்களின் கவனிப்பு அதிகரிக்க வேண்டும் என பலதரப்பிலுமிருந்தும் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.