குணமானோர் உடலிலிருந்து எளிதில் மறைந்துவிடும் கொரோனாவுக்கான எதிர்ப்புரதம்! - ஆய்வு
By Nivetha | Galatta | Jul 14, 2020, 04:14 pm
கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொரோனாவுக்கான சிகிச்சை மருந்தைக் கண்டறியப்படும் பணிகளும் வேகமாக நடந்துவருகிறது.
கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருக்கும் எதிர்ப்புரதம் (ஆன்டிபாடி) எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒருவேளை நீடித்த காலத்துக்கு அது இருந்தால், தடுப்பு மருந்து பணிக்கு ஆகும் காலத்தில் ஏற்படும் தாமதத்தை ஓரளவு கையாள முடியும்.
எதிர்ப்புரதம் என்பது, நோயாளிகள் குணமான பிறகு அவர்களின் உடலில் ஏற்படும் நோய்க்கு எதிரான ஒருவகை புரதம். இது உடலில் இருக்கும்வரையில், மீண்டும் அந்த நோய் உடலில் ஏற்படாது. இந்தக் காலம் அதிகமாக இருந்தால், மீண்டும் மீண்டும் நோயாளிகள் வருவது தவிர்க்கப்படும்.
இப்படியான எதிர்ப்புரதம், நோயாளிகளின் உடலில் ஒரு சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என சமீபத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை மருத்துவ சேவையகமான medrxiv.org தளத்தில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் மதிப்பாய்வு செய்யப்பட்டு மருத்துவ இதழில் வெளியாகவில்லை.
இதுபற்றி பேசும் ஆய்வாளர்கள், `சில மாதங்களிலேயே மீண்டும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு வருவார்கள். இது, நோயாளி எண்ணிக்கையைக் குறைக்கவே குறைக்காது. மாறாக அதிகரித்துக் கொண்டே போகும்' எனக்கூறியிருக்கிறார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 நாட்களுக்குள் ஆன்டிபாடிகள் குறையத் துவங்குமென இந்த ஆய்வில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறிகளின் தீவிரத்தை வைத்து, ஆன்டிபாடிகள் எந்தளவு எதிர்வினையாற்றுகின்றன என்பதைத் தீர்மானிக்க முடியுமென பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில், கொரோனா தொற்று உறுதியான 65 நோயாளிகளிடம், அறிகுறிகள் தெரியத் தொடங்கிய நாளிலிருந்து 94 நாட்களும் மற்றும் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே ஒவ்வொரு ஒன்று முதல் இரண்டு வாரங்கள் ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொண்ட 31 சுகாதார பணியாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் உடலில் ஆன்டிபாடிகள் உருவாக ஒன்று முதல் மூன்று வாரங்கள் ஆகலாமென அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவ துவங்கிய ஆரம்பக் காலத்தில், கொரோனா தொற்று உடையவர்கள், மீண்டும் வைரஸ் வருவதைத் தடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. ஆனால் இப்போது நிலை அப்படியல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இருப்பினும் இந்த ஆய்வை, அதிகப்படியான நோயாளிகளிடையே செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் அறிவியல் உலகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போதும் இதே போன்ற முடிவுகள் வெளிவருகின்றனவா என்று பார்க்க வேண்டியிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். மேலும் இப்படியொரு ஆய்வு மேற்கொள்ளப்படும்பட்சத்தில், கொரோனா தொற்றிலிருந்து மீளும் ஒருவர், மீண்டும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் நடத்தப்பட்ட மற்றொரு சிறிய ஆய்வில், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இதேபோல உறுதியாகி இருந்தது. அதேபோல கடந்த வாரம், ஒரு ஸ்பெயின் அரசு நடத்திய ஆய்வில், வெறும் 5% பேருக்கு கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகள் இருப்பதாகவும், ஒரு சில வாரங்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால், மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்படியான தொடர் ஆய்வுகள் அனைத்தும், நமக்கு மிகுந்த அச்சத்தைத் தந்துகொண்டிருக்கும் இதே வெஏளையில் உலக சுகாதார நிறுவனமும் நம்மை கொரோனா விஷயத்தில் எச்சரிக்கவே செய்கிறது. ``உடனடியாக நாடுகள் அனைத்தும் சுகாதார விஷயத்தில் முறையாகச் செயல்படாவிட்டால், விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும்'' என நேற்று ஜெனிவாவில் பேசியிருந்தார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதேனாம்.
மக்கள் அனைவரும், விழிப்புடன் செயல்பட்டு, தனித்திருப்பதும் விலகி இருப்பதும் கட்டாயம்!
- ஜெ.நிவேதா