“காதலிக்க மறுக்கும் இளம் பெண்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக” சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ள நிலையில், சில அதிரடியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிரடியாக உத்தரவி பிறப்பித்து உள்ளது.
“காதல்” என்ற உன்னத பெயரில், இந்த சமூக வெளிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பங்கள் பல, நடக்கின்றன. ஆனால், இது ஆணாதிக்க சமூக வீதிகளாக இருப்பதால், காதல் என்ற பெயரில் எதிர் மறையான பல்வேறு சம்பவங்களும் இங்கு அரங்கேறிக்கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றுதான்.
இதனால் தான், “காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல்களை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று, சென்னை மகளிர் நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டு இருக்கிறது.
அதாவது, திருப்பூரைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்ற இளைஞர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மன்னார்குடியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி, தொடர்ச்சியாக காதல் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், அந்த இளைஞரை காதலிக்க மறுத்த அந்த இளம் பெண்ணை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஆனாலும், அந்த இளம் பெண் காதலிக்க இறங்கி வாரத நிலையில், கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், அந்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி உள்ளான்.
இப்படியாக, கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இறுதியாக இந்த வழக்கில், ஒருதலை காதலன் அரவிந்த் குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அந்த இளைஞனுக்கு “ஆயுள் தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து” நீதிபதி முகமது பாரூக் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன், “அவருக்கு விதிக்கப்பட்ட இந்த அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்” என்றும், அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும், நீதிபதி தனது தீர்ப்பில் கூறிய கருத்துக்களில், “காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது” என்று, தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
குறிப்பாக, “இது போன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும்” நீதிபதி, தனது தீர்ப்பில் கூறினார்.
முக்கியமாக, “இது போன்ற சம்பவங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இவ்வாறான சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்” என்றும், தனது தீர்ப்பில் நீதிபதி முகமது பாரூக் தெரிவித்தார்.
காதல் விசயத்தில் பெண்களுக்கு ஆதரவாக நீதிபதி கூறிய இந்த கருத்து, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.