தமிழக பொண்ணும் - கேரளா இளைஞனும் கடந்த 6 மாதங்களாக “லிவிங் டு கெதர்” வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ளாமல் அந்த இளைஞன் கழற்றிவிட்டதால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், கேரளாவில் உள்ள அந்த இளைஞனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரியைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி படித்து வருகிறார்.
அதே போல், பழனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னையில் தங்கியிருந்து ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.
இப்படியான சூழலில் தான், கடந்த 6 மாதத்துக்கு முன்பு, இவர்கள் இருவருக்கும் நட்பாக அறிமுகம் ஆகி பழகி உள்ளனர்.
இதனையடுத்து, இவர்களுக்குள் காதல் மலர்ந்த நிலையில், இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளனர்.
அப்போது அந்த இளைஞர், “நாம் திருமணம் செய்து கொள்வோம்” என்று, அந்த இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.
இதனை நம்பிய அந்த இளம் பெண், கடந்த 6 மாதமாக அந்த இளைஞனுடன் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, திருமணம் செய்துகொள்ளாமல் “லிவிங் டு கெதரில்” கணவன் - மனைவியாகவே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் “எனது தந்தை, வெளிநாட்டில் இருந்து வந்து உள்ளார் என்றும், நான் உடனடியாக கேரளா சென்று தந்தையை சந்தித்து திருமணத்துக்கு அனுமதி வாங்கிவிட்டு வருகிறேன்” என்று, அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்.
ஆனால், அந்த இளைஞன் ஊருக்கு சென்றது முதல் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல், அந்த தொடர்ப்பு அப்படியே துண்டாகி உள்ளது. இதனால், தனது காதலன் மீண்டும் சென்னைக்கு திரும்பி வராததால், சந்தேகம் அடைந்த அந்த இளம் பெண் கேரள மாநிலம் மஞ்சேரில் உள்ள தனது காதலன் வீட்டிற்கு நேரில் சென்று உள்ளார்.
அங்கு, தனது காதலன் குறித்து அந்த பெண் விசாரித்த போது, “இங்கு யாரும் அப்படி இல்லை” என்று, அந்த இளைஞனின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண், “தனது காதலனை சந்திக்கும் வரை, அவரின் வீட்டின் வெளியே தங்கி போராட்டம் நடத்தப்போவதாக கூறி” அந்த இளைஞனின் வீட்டின் முன்பு அமர்ந்து, தொடர்ச்சியாக கடந்த 3 நாளாக போராட்டதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அதே நேரத்தில், அந்த இளைஞனின் பெற்றோரும், அந்த வீட்டிலிருந்து மற்றொரு புறமாக, தலைமறைவாகி உள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அங்குள்ள மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர்.
அத்துடன், இது தொடர்பாக அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், “இப்போது, நீங்கள் தமிழ்நாட்டுக்கு சென்று புகார் கொடுக்கள்” என்று, அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த இளம் பெண், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண், தனி ஆளாக கேராளவிற்கு சென்று, காதலன் வீட்டின் முன்பு கடந்த 3 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.