“குடியரசு தின அணிவகுப்பில் வஉசி, மகாகவி பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்களை மத்திய அரசு நிராகரித்தது ஏன்” என்பது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் பின்னணி தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் அந்தந்த மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில், அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் போராட்டங்கள் நினைவு கூறும் விதமான சிறப்புகளை கூறும் வகையில், அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வாடிக்கையாக இது வரை இருந்து வந்திருக்கிறது.
இந்த அலங்கார ஊர்திக்காக, இந்தியாவின் 36 மாநிலங்களின் சார்பிலும் மாடல்களை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.
அதில், தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அப்படி அனுப்பி வைகப்பட்ட ஊர்தியில், தமிழக சுதந்திர போராட்டத் தியாகிகளான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், தேசிய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் இல்லை என்று, கூறி மத்திய அரசு அவற்றை நிராகரித்து விட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதனையடுத்து, “டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணி வகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழகத்தின் சுதந்திர போராட்ட தியாகிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் நிராகரித்தது? என்பது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுவும், “இந்திய தாய்திருநாட்டின் விடுதலைப்போரில், தமிழர்களின் சுதந்திரப்பற்றை பறை சாற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது” என்கிற மிக கடுமையான விமர்சனம், தமிழ் மக்களின் இதயங்களில் கடும் ரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, இந்த ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பிற்காக, தமிழக அரசு சார்பில் 7 வரைபடங்களை தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, “வீரமாய் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை மையப்படுத்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வ.உ.சி. கப்பல் முன் நிற்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
ஆனால், “வ.உ.சி.யின் மார்பளவு சிலையை வைத்திருந்தால், பின்புற காட்சி மறைக்கப்படாது என்று, மத்திய அரசின் 9 உறுப்பினர்களை கொண்ட கமிட்டி முதலில் கருதியது.
ஆனால், 3 வது சுற்றில் நடந்தது தான் இன்னும் மிகப் பெரிய வேடிக்கையாக இருந்தது.
மத்திய அரசு கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். “ஆமாம், இந்த வ.உ.சி. என்ன தொழில் அதிபரா?” என்று..
அதாவது, பாஜக தலைமையிலான மத்திய அரசின் அலங்கார ஊர்தியை தேர்வு செய்யும் குழுவில் வ.உ.சி. யார் என்று தெரியாதவர்கள் இருக்கிறபோது, அவரைப் பற்றி என்ன தான் எடுத்துச் சொன்னாலும், அது செவித்திறனற்றவர்கள் காதில் ஊதிய சங்குதானே?” என்கிற மிக கடுமையான விமசர்னம் தற்போது முன் வைக்கப்பட்டு வருகிறது.
அதே போல், சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைப் பற்றை பாமரன் வரை தனது கவிதையால் ஊட்டிய தமிழ் தேரின் சாரதி என்ற புகழப்படும் நம் பாரதி, விடுதலைப்போராட்டத்தில் வீராங்கனைகளோடு வீர மங்கை வேலு நாச்சியார் தோன்றும் காட்சிகளெல்லாம் இடம் பெற்றிருந்தன.
ஆனால், இவர்களது படங்கள் 2 வது கட்ட பரிசீலனையில் மத்திய அரசின் கமிட்டி உறுப்பினர்களால் நிராகரிக்க காரணங்களாக கூறப்பட்டு இருக்கிறது.
அதாவது, “வீர மங்கை வேலுநாச்சியார், ஜான்சி ராணி போல காட்சி அளிக்கிறார். அவர் அமர்ந்திருக்கிற குதிரையின் நிறத்தை பழுப்பு நிறத்துக்கு மாற்றுங்கள்” என்று, கூறியிருக்கிறார்களாம்.
ஆனல், வரலாறு என்னவென்றால், “ஜான்சி ராணிக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர் தான் தமிழச்சியான வீர மங்கை வேலு நாச்சியார். இவர், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தனது நாட்டை இழந்து, மீண்டும் வென்ற ஒரே ராணி என்று தமிழ் சரித்திரம் போற்றுகிறது இவரது வரலாற்றை.
அதே போல், “வேலூர் கோட்டை, மருதுபாண்டியர் சகோதரர்களைக் காட்டும் வரைபடங்கள் மிகவும் கடுமையான சித்தரிப்புகள்” என்றும், அவரது படங்களையும் மத்திய அரசு குழுவினர் மறுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, “இந்த மருதுபாண்டியர்களை தேசிய அளவில் தெரியாது” என்றே, அந்த கமிட்டி உறுப்பினர் ஒருவர் எல்லோரும் முன்பும் கூறினார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், 3 வது கட்ட பரிசீலனையில், “வ.உ.சி.யின் மார்பளவு சிலையுடன் கப்பல் மாதிரி வடிவமைப்பையும், பாரதி வீராவேசத்தோடு முழங்குவது போலவும் விடுதலைப் போராட்ட வீரர்கள் அன்னிய பொருட்களை தீயிட்டு எரிப்பது போலவும், வீர மங்கை வேலுநாச்சியார் பழுப்பு நிற குதிரையில் பச்சை சேவையில் தோன்றுவது போலவும், மருதுபாண்டியர் சகோதரர்கள் வாளோடும், 4 வீரப் பெண்கள் ஈட்டியை ஏந்தியிருக்கும் மாதிரி வடிவமைப்புகளை தமிழக அரசு தயார் செய்து அனுப்பியிருந்தது.
ஆனால், மத்திய அரசின் கமிட்டி உறுப்பினர்கள் 3 முறை சொன்ன திருத்தங்கள் செய்யப்பட்டும், கடைசி நேரத்தில் அவைகள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
“மறுக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அதற்கு காரண காரியங்கள் தான் ஏது?” என்கிற மிக கடுமையான விமர்சனங்கள் தற்போது மத்திய அரசு மீது விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, 'தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம்.ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பி விட முடியாது” என்று தமிழில் ஒரு ஆகச் சிறந்த பழமொழி ஒன்று உண்டு. அதைதான் மத்திய அரசு செய்துக்கொண்டு இருக்கிறது என்று, பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது பலரும் தற்போது விமர்சன அம்புகளை வீசத் தொடங்கி உள்ளனர்.