இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்.. வாழ வழியில்லாமல் அகதிகளாக மக்கள் தமிழகம் வருகை!

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்.. வாழ வழியில்லாமல் அகதிகளாக மக்கள் தமிழகம் வருகை! - Daily news

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வருகை தந்து உள்ளனர்.

இலங்கையில் அத்தியாவசிய பொருளின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தற்போது  இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.
 
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இலங்கையின் மிகப்பெரிய கியாஸ் நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

மேலும் இதற்கிடையே இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே நேற்று டெல்லி வந்தார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த பசில் ராஜபக்சே, வரும் 30-ம் தேதி இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷிரிங்லா மற்றும் பல்வேறு அதிகாரிகளையும் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார். இந்த வருடத்தில் இதுவரை இந்தியா 1.40 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையில் எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.நிதி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் இலங்கை ரூபாவின் பெறுமதியை 36 வீதத்தால் குறைத்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. போர் காலத்தில் கூட காணப்படாத  நிலை அங்கு உள்ளது. அரிசியின் விலை  கிலோ ஒன்றுக்கு 448 இலங்கை ரூபாயாக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.128 ஆகும். ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263 (ரூ. 75 இந்திய ரூபாய்) உள்ளது.

அதனைத்தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களும் மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்தை தொட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரே முட்டையின் விலை ரூ.28 என அதிர்ச்சி அளிக்கிறது. ஆப்பிள் ஒன்றின் விலை ரூ.150 என ‘கசக்கிறது’.பேரீச்சம்பழம் கிலோ ரூ.900-ஐ தொட்டிருக்கிறது. பால், கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு என்று சகலத்தின் விலையும்  இறக்கை கட்டிப் பறக்கின்றன. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் புதிய ‘சாதனை’ படைத்திருக்கின்றன. இதன் காரணமாக பல வாகனங்கள் வீதியோரமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டன. பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக பஸ் அதிபர்கள்  சங்கங்கள் எச்சரித்திருக்கின்றன.

சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த காரணத்தால், இன்று முதல் சிற்றுண்டி விடுதிகளை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துவிட்டது. தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வு ஆகும். டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.260 ஆக சரிந்துள்ள நிலையில் அனைத்து பொருட்கள், சேவைகளுக்கான விலைகள் 29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, பன்னாட்டு நாணய நிதியம் என்று பல தரப்பிலும் கடன் பெற்று நிலைமையைச் சமாளிக்க முயல்கிறது இலங்கை. இந்நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து  அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் ஆகிய 6 பேர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக புறப்பட்டு தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 4-வது மணல்திட்டு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

மேலும் இவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள் மணல் திட்டில் இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 4-வது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்தவர்கள் இருப்பதாக தமிழக மீனவர்கள் மூலம் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்து இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடல் எல்லை பகுதியில் உள்ள 4-வது மணல் திட்டுக்கு விரைந்து சென்றனர். 

நான்காவது மணல்திட்டில் தவித்துக் கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் 6 பேரையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர். இலங்கையில் இருந்து தப்பி அகதிகளாக வந்தவர்களிடம், கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். 

அத்தனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் இலங்கை மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுடன் வந்த பெண் கியூரி ரூ.1 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கஜேந்திரன், அவருடைய மனைவி மேரி கிளாரா மற்றும் கியூரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மேலும்  5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

இந்நிலையில் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் படகின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் என்ஜின் சரி செய்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் கூறியதாவது: இலங்கை நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990-ம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012-ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக 12 ஆண்டுகளுக்கு பின்பு அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். மேலும் சலர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த கடல் பாதுகாப்பு அதிகரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment