“ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவுகிறது” என்று, 3 நாள் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
தோல்விகளால் துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சிந்தன் ஷிவிர் எனும் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியானது, தற்போது மொத்தமாகவே 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி தழுவியது.
இந்த நிலையில் தான், “எதிர் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து” ஆலோசனை நடத்த, 3 நாள் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்கி உள்ளது.
இந்த மாநாட்டில் “புதிய புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு, புதிய புதிய வியூகம் வகுக்கப்படும் என்றும், இந்த மாநாட்டில் இந்தியாவின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் பிரச்சினைகள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை, காஷ்மீர் தொகுதி மறுவரையறை, மத்திய - மாநில உறவு நிலைகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து” இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாகவும்” தகவல்கள் வெளியானது.
முக்கியமாக, “ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்” என்கிற புதிய திட்டத்தை காங்கிரஸ் கட்சியில் கொண்டு வந்து, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தான், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று பிற்பகலில் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
அதன் படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் இந்த சிந்தனை அமர்வு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “இந்தியாவில், ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக” பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, “தேசத் தலைவர்களை கொலை செய்தவர்கள் இன்று கொண்டாடப்படுகிறார்கள் என்றும். இந்திய ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்போர் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர்” என்றும், வெளிப்படையாகவே பேசினார்.
“இப்படியான நடவடிக்கையால், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது’’ என்றும், சோனியா காந்தி பெரும் கவலைத் தெரிவித்தார்.
சோனியா காந்தி பேசி முடித்த பிறகு, “காங்கிரஸ் கட்சியின் அடுத்தத் தலைவர் யார்?” என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன், இந்த மாநாட்டில் அதிருப்தியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும், இன்றைய கூட்டத்தில் முன்னெடுக்கப்படும்” என்றும், கூறப்படுகிறது.
குறிப்பாக, “காந்தி குடும்பத்தின் தலைமையிலேயே, காங்கிரஸ் கட்சி இயங்கும் என்ற தீர்மானமும் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், “காங்கிரஸ் கட்சியில் புதிய உறுதியுடன் வெற்றிக்கான பாதையை கண்டறிவதே இந்த மாநாட்டின் நோக்கம்” என்றும், விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த 3 நாள் காங்கிரஸ் மாநாட்டில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற குழு தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என கிட்டதட்ட 430 க்கும் மேற்பட்டோர், இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உள்ளனர்.
இதனிடையே, காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி பேசிய, தற்போது இந்திய அரசியலில் பேசும் பொருளாக மாறி உள்ளது.