“கிண்டல் செய்யுறதா எனக்கு தகவல் வருகிறது, ஆனால் அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்று, சசிகலா மனம் திறந்து பேசி உள்ளார்.
“அதிமுகவில் ஒற்றைத் தலைமை” விவகாரம் தான், கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
இதனால், சசிகலா ஆதரவாளர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் போஸ்டர் யுத்தத்தில் குதித்ததால், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
என்றாலும், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை” விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கும் நிலையில், அதிமுகவில் தான் பொதுச் செயலாளராக ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கிட்டதட்ட எடப்பாடி பழனிச்சாமி, செய்து விட்டார்.
இன்னொரு பக்கம், “நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்” என்றே தற்போது வரை சசிகலா கூறிகொண்டு வருகிறார்.
இதன் காரணமாகவே, “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்” என்று, சசிகலாவே கடந்த காலத்தில் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வந்தார்.
இதன் காரணமாகவே, “சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்” என்கிற ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன.
இவற்றுக்கு மத்தியில், “அதிமுக தொண்டர்களின் ஆதரவைத் திரட்ட தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்” மேற்கொண்டு வருகிறார் சசிகலா.
ஆனாலும், அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், தற்போது வரை சசிகலா அமைதியாக இருந்து வருகிறார் என்றே வெளியே பேசப்படும் நிலையில், “நான் அமைதியாக இல்லை” என்றும், சசிகலா கூறுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தான், விழுப்புரத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நான் தான் எப்போதும் அதிமுகவிற்கு பொதுச் செயலாளராக இருக்கிறேன்” என்று, அதிரடியாகவே கூறினார்.
“அதிமுக என்பது ஒரு தனி நபரின் வீடோ, ஒரு தனியார் அமைப்போ கிடையாது” என்றும், சூளுரைத்தார்.
“அதிமுக பொதுச் செயலாளராக யார் வரவேண்டும் என்பதை தனி நபர்கள் தீர்மானிக்க முடியாது என்றும், அதிமுக கட்சித் தொண்டர்கள் தான் அதை தீர்மானிக்க முடியும்” என்றும், சசிகலா சூளுரைத்தார்.
மேலும், “அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், துரோகிகளை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்” என்றும், சசிகலா வெளிப்படையாகவே பேசினார்.
குறிப்பாக, “வரும் 11 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுக் குழு கூட்டம், கட்சி விதிகளின்படி செல்லாது என்றும், அதற்கு காரணம் நான் தான் கட்சியின் பொதுச் செயலாளர்” என்றும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினார்.
முக்கியமாக, “அடுத்த கட்டமாக அதிமுக தொண்டர்களை திரட்டி அதிமுகவின் தலைமை கழகத்திற்கு செல்வேன் என்றும், அமைதியாக நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் அனைவரும் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றும், அதிரடியாக பேசினார்.
அத்துடன், “என்னுடைய அரசியல் பயணம் தேவையற்றது என்று சிலர் கிண்டல் செய்வதாக சொல்கிறீர்கள் என்றும், இது போன்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்த அவர், “அவர்கள் பேசுவதைப் பற்றி எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும், நான் எப்போதுமே நியாயப்படி தான் செயல்படுவேன்” என்றும், பேசினார்.
முக்கியமாக, “நான் அமைதியாக இல்லை என்றும், நான் என்ன செய்ய வேண்டுமோ அதை தொடர்ந்து முறையாக செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்றும், பிரிந்திருந்தாலும் என்னை பொறுத்த வரைக்கும் எல்லோரும் ஒன்று தான் என்று நான் நினைக்கிறேன் என்றும், இது தான் என்னுடைய முடிவு” என்று பாசமாக பேசிய சசிகலா, “எல்லோரும் என் பிள்ளைகள் தான்” என்றும், உருக்கமாகவும் அவர் பேசினார்.
“மக்களுக்கு பணியாற்றுகின்ற அனைத்து விஷயத்தில் ஜெயலலிதா என்னுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டே இருந்தார் என்றும், அவரின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றுகின்ற வகையில் தான், நான் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறேன்” என்றும், சசிகலா மனம் திறந்து பேசினார்.