“ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்கு தெரிந்த உண்மையானது, தற்போது ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்து உள்ளது” என்று, சசிகலா கூறியுள்ளது, தமிழக அரசியலில் பெரும் வைரலாகி வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, தமிழக அரசியலில் தற்போது வரை பெரும் புயலை கிளப்பிக்கொண்டுதான் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், அவர் மறைவு பற்றிய சர்ச்சைகள் இன்று வரை ஓயாமல் அலையை போல் தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே தான் இருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு கிட்டதட்ட 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் தொடர்ச்சியாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி, முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா உயிரிழந்தார்.
இதனையடுத்து, தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தனி விசாரணை நடத்த, அப்போதைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டது. அந்த வகையில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் என்று, இது வரை சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராகி தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.
இந்தநிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை, தற்போது அடத்த கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த 2 நாட்களாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஓபிஎஸ் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக, நேற்று 2 வது நாளாக ஆஜரான ஓபிஎஸ், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை” என்று, கூறியிருந்தார்.
குறிப்பாக, “சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை எனக்கு உள்ளது என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது” என்றும், ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இதற்கு பதில் அளித்து பேசிருந்தார்.
அதன் படி, “மக்களின் அச்சத்தை களையவேண்டும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று, ஓபிஎஸ் நேற்று சொன்னது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று, செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய சசிகலா, “கடவுளுக்கு தெரிந்த உண்மை அது. தற்போதுதான் மக்களுக்கு தெரிந்து உள்ளது. அப்படித்தான் அதை எடுத்துக் கொள்கிறேன்” என்று பதில் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, “சசிகலா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் அபிமானம் உண்டு என்று ஓபிஎஸ் சொல்லி உள்ளரே?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சசிகலா, “உண்மையை சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ்” என்று, சிரித்திக்கொண்டே பதில் அளித்தார்.
தற்போது, சசிகலா அளித்துள்ள பதில், அதிமுக வட்டாராத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.