தனியார் தொலைக்காட்சியில் சமுதாய விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட நாடகங்களில் நடித்த சிறுவர், சிறுமிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தந்தை பெரியார் நாடகம் நடத்தப்பட்டது. அதில், துவாஷிகா பெரியார் வேடம், உதய் பிரியன் பத்திரிகையாளர் வேடம், ஆலம் உதவி கேட்பவர் வேடம் ஆகிய சிறுவர், சிறுமிகள் நடித்திருந்தனர். குறவன், குறத்தி நாடகத்தில் குழந்தைகள் சாத்விக் குறவன் வேடம், தாரிகா லட்சுமி குறத்தி வேடம், ஸ்ரீராம், அரசியல் தொண்டர், சமிக்ஷா அரசியல் தலைவர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் குறவன், குறத்தி குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையில் வீடு போன்ற வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவது போலவும், அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவுவது போலவும் அந்த நாடகம் அமைந்திருந்தது. அதில் முதலமைச்சர், ‘நம் நாட்டில் வசிக்கும் அவர்களை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கிறீர்கள்? படிக்காத அவர்கள் ஒழுக்கமாகத்தான் இருக்கிறார்கள். படித்த நீங்கள்தான் இப்படி செய்கிறீர்கள்” என்று தீண்டாமை பற்றி பேசும் காட்சி அமைந்திருக்கிறது. இறுதியில் அந்த குறவன், குறத்தி குடும்பத்தினருக்கு பட்டாவோடு வீடு, குழந்தைகளின் படிப்புக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதாக முதலமைச்சர் உறுதி அளிக்கிறார்.
அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு வாழை இலை போட்டு உணவு வழங்கிவிட்டு, குறத்திக்கு போடப்பட்ட இலையில் இருந்து உணவை எடுத்து முதலமைச்சரும் சாப்பிடுவது போல அந்த நாடகம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், பெரியாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்பது போலவும், அதற்கு பெரியார் பதிலளிப்பது போலவும் மற்றொரு நாடகம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதில், சாதி, மதம் அடிப்படையிலான பிரிவினைகளை பெரியார் எதிர்ப்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நாடகங்கள், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த நாடகங்களில் நடித்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்கள் அனைவரையும் முதலமைச்சர் அன்புடன் வரவேற்றார். பின்னர் அவர் தனது இருக்கையில் அமர்ந்தபடி, தன்னைப் போல நடித்த குழந்தையை அழைத்து, அதுபோல மீண்டும் நடித்துக் காட்டும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அந்த குழந்தை நடித்துக் காட்டியதை மிகவும் ரசித்தார். பின்னர் பெரியார் வேடத்தில் நடித்த குழந்தையை அழைத்தார். பெரியார் போல நடித்துக் காட்டும்படி கூறினார். அந்தக் குழந்தை, பெரியார் போல நடித்துக் காட்டியதை ஆர்வமுடன் பார்த்தார். அவர்களுக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு சாக்லேட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவரிடம் இருந்த, குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்களை எடுத்து அதன் முதல் பக்கத்தில் தனது கையெழுத்தை போட்டு, அவற்றை பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார். தலைமைச் செயலகத்தில் பல்வேறு அலுவல்களுக்கு இடையே இந்தக் குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நேரம் மகிழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.