குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள வேங்கைவாசலைச் சேர்ந்தவர் மதன் வயது 29. இவர் இரு யூ-டியூப் சேனல்களை நடத்தி வந்தாா். தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வந்தாா். எனவே பப்ஜி மதன் என்று பட்டப் பெயர் கிடைத்தது.
இந்நிலையில் பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடி அதனை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மதன் குமார் என்கிற பப்ஜி மதனுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் 2021 ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது ஒரு சாதாரண வழக்கு எனவும் இதற்காக மதன் 9 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும் வாதிட்டார்.
அதனைத்தொடர்ந்து மதனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், ஆனால் காவல்துறையினர் மதனுக்கு மருத்துவமனையில் தங்க வைத்து வைத்து சிகிச்சை வழங்காமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், அரசால் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் VPN தொழில்நுட்பம் மூலம் தவறாக மதன் பப்ஜியை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். மதன் பேசியது பேச்சுரிமையில் வராது என கூறிய நீதிபதிகள், மதனின் இந்த செயலால், மற்றவர்கள் தவறான பாதையில் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர், மதனுக்கு தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.