கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்குக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று முதல் சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் கடந்த 2020 மார்ச் 23-ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவசரகால பயன்பாட்டுக்காக சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேக போக்குவரத்து சேவையானது இயக்கப்பட்டு வந்தது. கொரோனா அதிகம் உள்ள நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது. பயோ பபுள் முறையில் குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
அதனைத்தொடர்ந்து இந்நிலையில் அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட நிலையில் , பல்வேறு விதிமுறைகளுக்கு தளர்வும் அளித்துள்ளது. விமான பணியாளர்கள் பிபிஇ கிட் அணிய வேண்டியதில்லை , அவசர காலத் தேவைக்காக மூன்று அறிக்கைகளை நிரப்பக் கூடாது என்ற விதிமுறைகளையும் தளர்த்தி, முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பின்பு கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்து செயல்பட இருந்த நிலையில் ஒமிக்ரான் தொற்று காரணமாக சேவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.