வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்தில் சிக்கி தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் சின்ன அல்லா புரம் பலராமன் முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைவர்மா அவரது வயது 49. இவர் டோல்கேட் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். துறைவர்மாவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் மோகன பிரீத்தி வயது 13 ,மகன் அவினாஷ் வயது 10. மோகன பிரித்தி போளூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தந்தை வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் துரை வர்மா எலக்ட்ரானிக் பைக் மற்றும் பெட்ரோல் பைக் ஒன்றும் வைத்துள்ளார். எலக்ட்ரானிக் பைக் பேட்டரிக்கு இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது வீடு மிகவும் குறுகிய அறைகளை கொண்டதாகும். இந்த வீட்டில் ஜன்னல்கள் எதுவுமில்லை. நேற்று இரவு பைக்குகளை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவினாஷ் அதே தெருவில் உள்ள அவரது அத்தை வீட்டுக்கு சென்று விட்டார். துரை வர்மாவும் அவரது மகள் மோகன ப்ரீத்தியும் வீட்டில் இருந்தனர். இரவு எலக்ட்ரானிக் பைக் பேட்டரி சார்ஜ் போடுவதற்கு துரை வர்மா மின் இணைப்பு கொடுத்தார். பைக்கில் ஜார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அவரும் அவரது மகளும் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கிவிட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சார்ஜ் ஏறிக் கொண்டே இருந்ததால் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி அதிக அளவில் சூடானதாக தெரிகிறது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து சிதறியது.
இந்நிலையில், பைக் வெடித்ததில் பைக் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பைக்கும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் குறுகிய வாசலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மளமளவென எரிந்தன. சத்தம் கேட்டு கண்விழித்த துறை வர்மா மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றனர் ஆனால் வாசலிலேயே இந்த வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை என கூறப்படுகிறது.
மேலும் அந்த நேரத்தில் எலக்ட்ரானிக் பைக் வெடித்ததால் வீடு முழுவதும் உள்ள மின் ஒயர்கள் எரிந்தன. வீட்டில் இருந்த கட்டில் நாற்காலி போன்ற பொருட்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துவிட்டது. சிறிய அறை என்பதாலும் வீட்டில் ஜன்னல் இல்லை என்பதாலும் வீடு முழுவதும் புகை மூட்டம் எழுந்தது. இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
துறைவர்மா வீட்டில் கண் விழிக்க முடியாத அளவிற்கு புகை மண்டலம் இருந்ததால் துரைவர்மா தப்பி உயிர் பிழைப்பதற்காக அவரது மகளை அழைத்துக்கொண்டு வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். கதவை அடைத்தபடி இருவரும் உள்ளே அமர்ந்திடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வீடு முழுவதும் எழுந்த புகை மண்டலம் கழிவறைக்குள் புகுந்தது. அங்கிருந்த துரை வர்மா, மோகன பிரீத்தி இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அமர்ந்த நிலையிலேயே இறந்தனர்.
அதன் பின்னர் அவர்களது வீட்டிலிருந்து புகைமண்டலம் வெளியேறி பக்கத்துவீட்டிற்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் கண்விழித்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது துரைவர்மாவின் வீட்டில் இருந்து பயங்கர புகைமண்டலம் எழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 2 பைக், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. புகை மண்டலம் குறைந்தவுடன் போலீசார் வீட்டுக்குள் சென்றனர். கழிவறையில் சென்று பார்த்தபோது அங்கு துரை வர்மா அவரது மகள் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.