இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - Daily news

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.    

இருளர் இன மக்களின் பரம்பரை தொழில் பாம்பு பிடிப்பதாகும். தமிழக தொழில், வணிகத் துறையின் கீழ் 1978-ல் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மெளி பகுதியில் இருளர் பாம்பு பிடிப்பது கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பாம்பு கடி விஷ முறிவு மருந்து தயாரிக்கும் பணி, கூட்டுறவு சங்கம் மூலம் 1979-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மத்திய அரசு பாம்புகள் இனப்பெருக்கம் காலமாக அறிவித்துள்ள ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதங்கள் தவிர மற்ற காலங்களில் பாம்புகளை பிடிக்க அனுமதி அளித்து வந்தது. 

இந்நிலையில் விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை பாம்பு இனங்கள் பயன்படுத்தப்படும் நிலையில் ஆண்டிற்கு 13 ஆயிரம் பாம்புகள் பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.  இதையடுத்து வனத்துறை 8000 பாம்புகள் பிடிக்க அனுமதி அளித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டிற்கு 5 ஆயிரம் பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  அத்துடன் தாமதமாக பாம்பு பிடிக்க அனுமதி கிடைத்ததால் இருளர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சராசரியாக ஆண்டிற்கு 500 கிராம் விஷமுறிவு மருந்து தயாரிக்கப்பட்டு இதன் மூலம் ஒன்றரை கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதுடன், அரசுக்கு பங்கு தொகையாக 3 முதல் 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதனால் பாம்பு விஷ முறிவு மருந்துக்கான பாம்பு பிடிக்க வனத்துறை அனுமதிக்காமல் தாமதப்படுத்துவதால், உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமெனக் இருளர் இன மக்கள் தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து  இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விஷ முறிவு மருந்துக்கான பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்பவர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருளர் இன மக்கள் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கியதோடு, அதிகாரபூர்வமாக அரசாணையையும்  தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment