“உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வரவே வராது” என்று, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளது பொது மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இப்போது தான் கொரோனா வைரஸ் தொற்றின் 3 வது அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொரோனா 4 ஆம் அலையே முடிவுக்கு வரப்போகிறது.
இந்த நிலையில் தான், “கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா மாறுபாடு ஏற்படும்” என்று, ஐ.நா. பொதுச் செயலாளர் நேற்றைய தினம் புதிய எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதனை தற்போது உறுதி செய்யும் வண்ணம், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வரவே வராது” என்று, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளது, உலக நாடுகளுடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை இந்த கொரோனா வைரஸ் உலகின் கிட்டதட்ட 221 நாடுகளுக்கும் பரவி, மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.
அத்துடன், உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து புதிய புதிய பாதிப்புகளாக மாறிக்கொண்டே வருகிறது.
முக்கியமாக, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 33 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 839 ஆக தற்போது உயர்ந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 7 லட்சத்து 62 ஆயிரத்து 358 பேர் தற்போது உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனாலும், உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசால் கிட்டதட்ட 55 லட்சத்து 82 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் தான், ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வரவே வராது” என்று, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அத்துடன், “தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்க்கு பிறகும் இன்னும் புதிய புதிய நோய் தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது” என்றும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும், “ஒமைக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம் என்றும், ஆனால் இது லேசான நோய் என்று சொல்வது தவறாக வழி நடத்துகிறது” என்றும், அவர் கூறினார்.
“ஒமைக்ரான் பாதிப்பால், மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணமே உள்ளது என்றும், இதன் காரணமாக உயிரிழப்புகளையும் ஏற்படுகிறது என்றும், அதே நேரத்தில் இந்த வைரசால் இன்னும் தீவிரமான தாக்கம் மற்றும் பரவல் பரவக்கூடும் என்பதால் இன்னும் பலர் பாதிக்கப்படக் கூடியவர்களாக மாறுவர்கள்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அதே போல், உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி பேசும் போது, “கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பதை இப்போதே கணித்து கூறி விட முடியாது என்றும், அதற்கு காரணம் புதிய புதிய உருமாற்றங்கள் வெளி வருகின்றன” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.