தீ பிடித்து எறிந்த தனியார் ஆம்புலன்ஸ்.. துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்!

தீ பிடித்து எறிந்த தனியார் ஆம்புலன்ஸ்.. துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்! - Daily news

நோயாளியுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை கீழ்பாக்கம் லாக் தெருவை சேர்ந்தவர் முதியவர் நடராஜன். 78 வயதான இவர் முடக்க நோய் சிகிச்சைக்காக சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவிருந்தார்.  இதனால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நடராஜன் சித்தூருக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்தேறின. இதற்காக நேற்று இரவு தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் பதிவு செய்யப்பட்டு அவரது மருமகனான தலைமை காவலர் சதீஷ், அவருடன் சித்தூர் புறப்பட்டுள்ளார். 

இந்நிலையில்  கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, அதன் முன்பகுதியிலிருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உள்ளே இருந்த நடராஜன் ,அவரது மனைவி, மருமகனான தலைமை காவலர் சதீஷ் ஆகியோரை உடனடியாக கீழே இறங்க அறிவுறுத்தியுள்ளார் ஓட்டுநர்.

அதனைத்தொடர்ந்து வண்டியை நிறுத்தியவர் மறுகணமே  தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஆம்புலன்ஸ்  ஓட்டுநர் தகவல் அளித்துள்ளார். அதற்குள் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து உள்ளது.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வில்லவாக்கம் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு துறை  வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும்  ஆம்புலன்ஸ் முழுவதுமாக தீக்கிரையானது. இச்சம்பவத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  இருப்பினும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Leave a Comment